பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழ் மக்களுக்கு கனடா பிரதமர் Justin Trudeo தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் டுவிட்டரில், வணக்கம் என தனது வாழ்த்து செய்தியை துவங்கினார். தொடர்ந்து அவர் கூறியதாவது: கனடாவில் வசிக்கும் தமிழர்கள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்கள் தை பொங்கல் பண்டிகையை கொண்டாட உள்ளனர். இந்த பண்டிகையின் ஒவ்வொரு நாளும், சிறப்பு அர்த்தங்கள் பாரம்பரியத்தை கொண்டவை. இவை அமைதி, மகிழ்ச்சி ஆகியவற்றை குறிக்கும். ஜனவரி மாதத்தை தமிழ் பாரம்பரியமாதமாக கொண்டாட கனடா பார்லிமென்டில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. கனடா வாழ் தமிழர்களின் வலிமையான பாரம்பரியத்தை நாம் அனைவரும் பிரதிபலிக்க வேண்டும் என அனைவரையும் வேண்டுகிறேன்.
கனடா வாழ் தமிழர்களால் நமது நாடு வலிமையானதாகவும் பணக்கார நாடாகவும் மாறியுள்ளது. இந்த வருடம் கனடா உருவாகி 150வது ஆண்டை குறிக்கிறது. இந்த சந்தர்ப்பத்தில் நாம் பல கலாசாரங்கள், மொழிகள் மற்றும் நம்பிக்கைகள் ஆகியவற்றை கடைபிடித்து, நமது நாட்டை அன்புடனும், அமைதியுடனும் வாழும் நாடாக மாற்ற வேண்டும். அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் எனக்கூறி தனது உரையை நிறைவு செய்துள்ளார்.