உலகின் கவனம் உங்கள் மீது திரும்ப வேண்டுமெனில், ஒவ்வொரு நொடியையும் கவனமாக எடுத்து வைக்க வேண்டும். அதேவேளையில் கடந்து வந்த மைக்ரோ நொடிகளைக் கூட கவனத்தில் கொள்ள வேண்டும். கடந்த வந்த பாதை, முட்கள் நிரம்பியவையாக இருக்கலாம். ஆனால் அவை கற்றுக் கொடுத்தப் பாடங்கள் மிக முக்கியமானவை. முட்பாதைகள் ரோஜாக்கள் நிரம்பிய மலர் பாதையாக மாற கடந்த வருடம் நமக்கு துணை நிற்கும். வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும் முக்கியமானவையே! நம்பிக்கை நாற்றுடன் இந்த ஆண்டில் பயணிப்போம்.
ஒலிம்பிக்கில் எட்டு தங்கம் வென்ற நீச்சல் வீரர் மைக்கல் பெல்ப்ஸ் இவ்வாறு கூறுகின்றார். “விநாடிகளின் அருமையை எனக்குக் கற்று தந்தது முதல் ஒலிம்பிக். சில விநாடிகளைச் சேமிக்காமல் விட்டதால் நான்கு வருடங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது.” தோல்விகள் என்பவை வெற்றிக்கான வழித்தடத்தை நோக்கி பயணிக்க உதவும் மைல்கற்கள். அதனால் தான் பெல்ப்ஸ் இன்றுவரை தொடர்ந்து வெற்றிப் பெற்றுக் கொண்டு இருக்கின்றார்.சென்ற வருடத்தின் தவறுகளை திருத்தி இந்த வருடத்தின் வெற்றியாளராக முயற்சிகளை மேற்கொள்வோம். குற்றங்களை தவறுகளை மனதில் நிலைநிறுத்திஅதனை களைத்து செயல்படுவோம். தவறுகள் அற்ற நிலையே நமக்கு பெரும் செல்வமாகும். நாம் செய்யும் தவறுகளே நம்மை அழிக்கும் பகையாக வருவதால் தவறுகளற்று செயல்படுதலே வெற்றியை கொடுக்கும். தவறுகள் அற்ற மனநிலையை உருவாக்கிட முயற்சி மேற்கொள்ள வேண்டும். இதனையே திருவள்ளுவர்“குற்றமே காக்க பொருளாகக் குற்றமேஅற்றம் தரூஉம் பகை” என்கின்றார்.
உறுதியான மனநிலை
உறுதியான மனநிலையே தவறுகள் அற்று செயல்பட உதவும். பாரதி கூறியது போன்று ‘மனதில் உறுதி வேண்டும்’. சிறிய தோல்வி கூட நம்மை உலுக்கி விடலாம். மனம் தோல்வி கண்டு துவண்டு போய்விடக்கூடாது. கலங்குதல் அறிவுடமை ஆகாது. யார் தான் தோல்வியை தழுவவில்லை. வில்வீரன் ‘அர்ஜுனன்’ காண்டீபம் ஏந்திய கையில் சங்கு வளையல் அணிந்து அலியாகவில்லையா? பலவான் ‘பீமன்’ சமையல்காரனாகி கரண்டி பிடிக்கவில்லையா? எல்லோரும் வணங்கிய மதித்த தருமன் செங்கோல் ஏந்த வேண்டிய கையில் மூங்கில் கோலை ஏந்தித் தரகனுக்கு கீழாக பணியாற்றவில்லையா? புகழ்பெற்ற நகுலனும் சகாதேவனும் மற்றொருவனின் குதிரை,மாடுகளைப் பராமரிக்கும் பணியினை செய்ய வில்லையா? மகாராணி ‘திரவுபதி’ அடிமையாக வாழ வில்லையா? யார் தான் தோல்வியை தழுவவில்லை. தோல்வி என்பது ஊக்கமற்ற நிலை. எங்கே தோல்வி ஏற்பட்டு விடுமோ என்ற பயம். ஊக்கமற்ற நிலை. ஊக்கமே உயர்வின் வாயிற்படி.
எது ஊக்கம்
“உரமொருவற்கு உள்ள வெறுக்கை அஃதில்லார்மரமக்க ளாதலே வேறு” என்கிறார் வள்ளுவர். ஒருவருக்கு வலிமையாவது ஊக்கமிகுதியே; அவ்வூக்கம் இல்லாதவர் மரங்களே ஆவர். மனதால் எழுவதே ஊக்கம். ஊக்கத்தை உண்டாக்கும் மன எழுச்சியே வெற்றியை தரும். ஆகவே தோல்வியை கண்டு முடங்கிப் போகிட வேண்டாம். துன்பங் கொண்டு பதுங்கிட வேண்டாம்.
துன்பக்கடலில் வாழ்க்கைப் படகினை சாமர்த்தியமாக ஓட்ட வேண்டும். ஓட்டை கொண்ட படகு சாதாரண நதியிடமே சரணடைந்துவிடும். ஆகவே துன்பக்கடலில் பயணம் செய்யும் படகாகிய நம்மை நற்சிந்தனைகளாலும் ஆழமான ஆன்மிகத்தினாலும் வளமான நற்பண்புகளாலும் பலப்படுத்திக் கொள்வோம். மனதை உறுதிப்படுத்துதலே கடலின் மறுகரையை கடக்க உதவும். ஆகவே மனதின் ஆற்றலை உணர்வோம். அதற்கு கடந்து வந்த பாதை உறுதுணைபுரியும். மனம் திடமானதாய் இருப்பின் துன்பங்கள் லேசானவையாகி விடும்.
வெற்றிக்கு வழி
“ஊழிபெயரினும் தாம் பெயரார் சான்றாண்மைக்குஆழி எனப்படு வார்” – என்கிறார் திருவள்ளுவர்.
மனவலிமையின் ஆற்றலை அறிந்து உணர்ந்தவர்கள் ஆழ்கடலின் அமைதி போல் அடக்கமாகவும் பெருந்தன்மையாகவும் இருப்பார்கள். அவர்களுக்கு ஏற்படுகின்ற துன்பங்கள், துயரங்கள் கடலின் மேற்பரப்பில் தோன்றும் அலை போன்றதாகும். உள்மனமோ அமைதியானது. இத்தகையோரையே சான்றோர் எனப் போற்றப்படுகின்றனர். மனமே சான்றோராக்குகின்றது. மனமே உயர்ந்தோர் ஆக்குகின்றது. மனமே படைப்பிற்கு கர்த்தாவாக கருவியாக நின்று செயலாற்றுகின்றது. அம்மன ஆற்றலை உணர்ந்தால் எல்லாவற்றிலும் வெற்றிக் கிட்டும்!
உடலை உறுதி செய்ய உடற்பயிற்சி மேற்கொள்வது போன்று மனநலத்திற்கு தியானப்பயிற்சி மேற்கொள்வோம். தியானம், யோகா போன்ற பயிற்சிகள் எண்ணங்களை ஏற்றம் பெறச் செய்ய உதவுகின்றன. நல்ல எண்ணங்கள் ஆழ்மனதில் பதிவுகளாக அமைந்து நம் செயல்பாடுகளாக மாறுகின்றன. ஆழ்மனம், பலவேளைகளில் விளங்காத புதிர்களுக்கு விடை கண்டு பிடிப்பவையாக உள்ளன. ஆம்! உள்மன ஆற்றலால் அறிவின் வெளிப்பாட்டால் புதிய கண்டு பிடிப்புகள் பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கனவுகள், வெற்றிகள் எலியாஸ் ஹோப் என்பவர் நாம் பயன்படுத்தும் தையல் மெஷினைக் கண்டுபிடித்த அறிவியல் அறிஞர். தையல்மெஷினில் உள்ள ஊசியை கண்டுபிடிக்க பல ஆண்டுகள் முயற்சி எடுத்து கொண்டுள்ளார். சாதாரண ஊசியில் துளை மேலே இருக்கும். அது மிஷினில் பொருத்த இயலாது. ஊசியை வடிவமைப்பது குறித்து ஆழ்ந்த சிந்தனையில் இருக்கும் போது எலியாஸ் ஹோப்க்கு கனவு ஏற்பட்டுள்ளது. கனவில் காட்டு வாசி பலரின் மத்தியில் சிக்கிக் கொண்டது போலவும், அக்காட்டு வாசிகளில் ஒருவன் தன்னை கொல்ல வருவதாகவும், அக்கருவியின் நுனியில் ஓட்டை இருப்பதையும் கண்டு திடுக்கிட்டு எழுந்துள்ளார்.
அவர் கண்ட அந்த கனவுதான் தையல் இயந்திரத்தின் நுனியில் ஓட்டையுடைய ஊசியை கொடுத்தது. நம் ஆழ்மனதில் எவ்வகையான எண்ணங்களை விதைக்கின்றோமோ அவையே கனவுகளாகவும் கற்பனைகளாகவும் திடீரென்று முளைக்கின்றன. உயரிய எண்ணங்களால் ஆழ்மனதை ஊறப்போடுங்கள்.
“முடியாது என்பது முட்டாளின் அகராதி” என்றார் நெப்போலியன். உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள். நம் மீது நாம் நம்பிக்கை கொள்வோம். கடந்த நாட்களின் நம்பிக்கையின்மை உங்களுக்கு தோல்வியினை ஏற்படுத்தி இருக்க கூடும். அதனால் சோர்வு ஏற்பட்டிருக்கலாம். இந்த சோர்வு உங்களை வருத்தம் கொள்ள செய்யலாம். கசப்புகளை நினைத்து கொண்டு வீட்டின் அனைத்து கதவுகளையும் பூட்டி முடங்கி போக வேண்டாம். ஒப்பாரி வைத்து அழ வேண்டாம். மனக்கதவை திறந்து வெளி வாருங்கள். வாழ்வில் மகிழ்ச்சி தென்றல் வீசிட ஆயிரமாயிரம் நந்தவனங்கள் இருப்பதை காணலாம். மனச்சோர்வு இறந்தகாலத்தின் கசப்புகளை கொடுப்பவை. இறந்தகாலத்தின் கசப்புகளை நினைப்பதால் நிகழ்காலம் கண்ணீரால் களவாடப்படலாம். அதனால் எதிர்காலம் முடங்கிப்போகலாம். மனதை புத்துணர்வுடன் வைத்திருங்கள். எதையும் சாதிக்கலாம். முடியாது என்று எதுவும் இல்லை. நம்பிக்கை கொள்ளுங்கள்; எல்லாக்காலமும் உங்கள் வசப்படும்.
என்னவாக வேண்டும்
“தான் விரும்புவதை செய்யக்கூடியவன் வல்லவன்; தான் செய்யக்கூடியதையே செய்ய விரும்புபவன் அறிவாளி” என்கிறார்பிஸ்மார்க். கடந்த வருடங்களில் எல்லையற்று பயணித்து இருக்கலாம். பலர் கூறிய பாதைகளில் பயணித்து இருக்கலாம். பலரின் வற்புறுத்தலில் உங்கள் மனம் விரும்பாத ஒன்றை செய்திருக்கலாம். வரும் நாட்களில் மனம் விரும்பியதை செய்ய முயற்சியுங்கள். இதை தான் பகவத் கீதை “நீ என்னவாக வேண்டும் என்று ஏங்கித் தவிக்கிறாயோ நீ அதுவாக ஆகிறாய்” என்கிறது. உங்கள் மனம் விரும்பியதை செய்யுங்கள். மனதின் சக்தி மாபெரும் சக்தி. அது உயர உயர வெற்றிமலர்கள் உங்கள் காலடியில் குவியும். வெற்றி காலடியில் குவிய விரும்பியதை செய்யுங்கள்.
தோல்வி என்ற அழுகிய ஆப்பிளை உறுதியான மனதின் கத்தியால் நான்கு துண்டுகளாக வெட்டுங்கள். அதிலிருந்து விதைகளை எடுத்து விதையுங்கள்; கடந்த காலத்தின் விதை உங்கள் மன உறுதியில் நற்பண்பில் நல் எண்ணத்தில், ஊக்கத்தில்,நம்பிக்கையில், விரும்பிய செயலில், வெற்றிக்கனியாக புதிய ஆப்பிளாக கிடைக்கும். புதிய சமுதாயம் படைப்போம்.-