இஸ்தான்புல் நகரில் ரெய்னா இரவு விடுதியில் புத்தாண்டையை கொண்டாடிய பொதுமக்கள் மீது சாண்டா கிளாஸ் உடையணிந்து வந்திருந்த பயங்கரவாதி சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினான். இத்தாக்குதலில் 39 பேர் உயிரிழந்தனர். 40-க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர்.
இதனையடுத்து பயங்கரவாதி தப்பி ஓடிவிட்டான். பயங்கரவாத தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பு ஏற்றது. சிரியாவில் துருக்கி ராணுவத்தின் செயல்பாட்டு எதிரான பழிவாங்கும் நடவடிக்கை என்றது ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு.
இதற்கிடையே தப்பி ஓடிய பயங்கரவாதியை தேடும் பணியானது தொடர்ந்து நடைபெற்றது. இப்போது தாக்குதலை முன்னெடுத்த பயங்கரவாதி பிடிபட்டான் என செய்திகள் வெளியாகி உள்ளது. துருக்கி-ஐரோப்பா எல்லைப் பகுதியான எஸென்யூர்ட் மாவட்டத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் தனது 4 வயது மகனுடன் பதுங்கி இருந்த அபு முஹம்மது ஹொராசானி என்பவனை போலீசார் நேற்று கைது செய்ததாகவும், கைதான நபர் உஸ்பெகிஸ்தான் நாட்டு வம்சாவளியைச் சேர்ந்தவன் என்றும் அந்த செய்திகள் குறிப்பிடுகின்றன. அவனிடம் விசாரிக்கப்படுகிறது.