பெருமளவான முதியவர்கள் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகின்ற போதிலும், அவர்களில் ஒரு சிலரே அது குறித்து முறைப்பாடு செய்வதாக ரொரன்ரோ காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஒன்ராறியோவில் மட்டும் சுமார் இரண்டு இலட்சம் முதிவர்கள் இவ்வாறு துன்புறுத்தல்களுக்கு உள்ளாகியுள்ளதாக ரொரன்ரோ காவல்த்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.
இவ்வாறு உடலியல் ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் பல முதியவர்கள் துன்புறுத்தப்படுவதாகவும், அவ்வாறு துன்பங்களை அனுபவிப்போரில் இருபதில் ஒரு பங்கினரே முறைப்பாடு செய்ய முன்வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இவ்வாறு துன்புறுத்தல்களுக்க உள்ளாகும் முதியவர்களில் 43 சதவீதத்தினர் தமது சொந்த பிள்ளைகளாலேயே துன்புறுத்தப்படுவதாகவும், தமது பிள்ளைகளில் தங்கி வாழ்வதன் காரணமாகவே பலரும் அவர்களுக்க எதிரான முறைப்பாடுகளைச் செய்ய முன்வருவதில்லை எனவும் அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
தமது பிள்ளைகளைகள் குறித்து முறைப்பாடு செய்வதனை வெட்கக்கேடாக கருதுவதாலும், எதுவுமே இல்லாது இருப்பதனை விடவும் இவ்வாறான துன்புறுத்தல்களைத் தாங்கிக் கொண்டு இருக்கலாம் என்ற நிலைப்பாடுகளாலுமே, பல முதியவர்கள் தாம் எதிர்நோக்கும் துன்புறுத்தல்களை வெளியே சொல்ல முற்படுவதில்லை எனவும் அவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை எதிர்வரும் காலங்களில் முதியவர்களின் எண்ணிக்கையும் மேலும் அதிகரிக்கவுள்ள நிலையில், இவ்வாறு பாதிப்புக்களை எதிர்நோக்குவோரின் தொகையும் அதிகரிக்க கூடும் எனவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
குறிப்பாக 2030ஆம் ஆண்டளவில் கனேடிய மக்கள் தொகையில் நான்கில் ஒரு பங்கினர் 65 வயதுக்கும் அதிகமானவர்களாக இருப்பார்கள் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.