பழமைவாதக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றுகூடும் இரண்டு நாள் மாநாடு ஒன்று இன்று கியூபெக் நகரில ஆரம்பமாகவுள்ளது.
நாடாளுமன்றம் அடுத்த வாரத்தில் மீண்டும் கூடவுள்ளதுடன், பழமைவாதக் கட்சியின் இடைக்காலத் தலைவரான றோனா அம்புறோசின் பதவிக் காலமும் இந்த மாதத்துடன் முடிவடையவுள்ள நிலையில், இந்த மாநாடு கூடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் பிரதமருமான ஸ்டீபன் ஹார்ப்பர் பதவி விலகியதைத் தொடர்ந்து, பழமைவாதக் கட்சிக்கான நிரந்தரத் தலைமைத்துவம் இன்னமும் நியமிக்கப்படாத நிலையில், தலைமைத்துவத்தினை அடைவதற்கான போட்டியும் இன்னமும் தொடர்ந்து வருகிறது.
இதேவேளை அயல் நாடான அமெரிக்காவிலும் எதிர்பாராத அரசியல் தலைமை மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், பல்வேறு விடயங்கள் குறித்து இந்த மாநாட்டில் பழமைவாதக் கடசியியின் பிரமுகர்கள் ஆராய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை தற்போது அமெரிக்க ஆட்சி மாற்றம், வர்த்தக உடன்படிக்கைகளின் எதிர்காலம், காபன் வெளியேற்ற கட்டண விவகாரம், பிரதமரின் அண்மைய விடுமுறைப் பயணம் தொடர்பிலான சர்ச்சை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள், எதிர்க்கட்சியாகிய பழமைவாதக் கட்சிக்கு தற்போது நாடாளுமன்றில் கேள்விகளை எழுப்புவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இவ்வாறான நிலையில் கருத்து வெளியிட்டுள்ள எதிர்க்கட்சி உறுப்பினர்களின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் கன்டீஸ் பேர்கன்(Candice Bergen), பிரதமரின் அண்மைய நாடு தளுவிய சுற்றுப் பயணம் அரசாங்கத்துக்கு அரசியல் அனுகூலத்தினை ஏற்படுத்தியுள்ளதாக ஜஸ்டின் ரூடோ கருதினால், அதனைத் தங்களால் தலைகீழாக மாற்றியமைக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஜஸ்டின் ரூடோவிடம் காணப்பட்ட குறைபாடுகளை தாங்கள் தேர்தலின் முன்னரே அறிந்திருந்த போதிலும், தற்போது நாட்டு மக்களும் அதனை அறிந்துகொள்ள ஆரம்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கட்சிக்கான தலைமைப் பதவிக்கு தற்போது 14 பேர் போட்டியிடுகின்ற நிலையில், பழமைவாதக் கட்சிக்கு தமது கட்சிக்குள்ளேயே தீர்க்கப்பட வேண்டிய பல்வேறு சவால்கள் உள்ளதும் சுட்டிக்காட்டப்படுகிறது.