ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு ஆதரவான போராட்டங்களை ஒட்டி ஜனவரி 23ஆம் தேதி சென்னையில் ஏற்பட்ட கலவரத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட நடுக்குப்பம் மக்கள், காவல்துறையே தங்களை தாக்கியதாக குற்றம்சாட்டுகிறார்கள். காவல்துறை அதனை மறுத்துள்ளது.
ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு ஆதரவான போராட்டங்களை ஒட்டி ஜனவரி 23ஆம் தேதி சென்னையில் வெடித்த கலவரத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட நடுக்குப்பம் மக்கள், காவல்துறையே தங்களை தாக்கியதாக குற்றம் சாட்டுகிறார்கள். காவல்துறை அதனை மறுக்கிறது.
மெரீனா கடற்கரையிலிருந்து அவ்வை சண்முகம் சாலையில் நுழைந்தவுடன் அமைந்திருக்கும் நடுக்குப்பம் கிராமம், தமிழகத்தின் முன்னோடி பொதுவுடமை இயக்கத் தலைவர்களில் ஒருவரான சிங்காரவேலர் பிறந்த பகுதி.
தற்போது சுமார் 750 மீனவ இனத்தைச் சேர்ந்த குடும்பங்கள் இங்கு வசிக்கின்றன. 384 கடைகளைக் கொண்டு ஒரு மிகப்பெரிய மீன் பிடி சந்தையும் இப்பகுதியில் இருக்கிறது.
23ஆம் தேதி மதியம் திடீரெனக் கலவரம் வெடித்ததும் சில இளைஞர்கள் இந்தப் பகுதிக்குள் ஒடிவந்ததாகவும் அவர்களைத் துரத்திவந்த காவல்துறையினர் அந்த இளைஞர்களைத் தேடி வீடுகளுக்குள் புகுந்ததாகவும் எதிர்ப்பட்டவர்களைத் தாக்கியதாகவும் குற்றம்சாட்டுகிறார்கள் இந்தக் குப்பத்தைச் சேர்ந்தவர்கள்.
ஜல்லிக்கட்டு போராட்டம் : தீக்கிரையாக்கப்பட்ட சென்னை நடுக்குப்பம் (புகைப்படத் தொகுப்பு)
இந்தத் தாக்குதலை நேரில் பார்த்த விஜயா என்பவர் பிபிசியிடம் இதைப் பற்றிக் கூறும்போது, “ஓடிவந்தவர்கள், போலீஸுக்குப் பயந்து அடைக்கலம் கேட்கும்போது கொடுக்காமல் இருக்க முடியுமா? அதைப் பார்த்து காவல்துறையினர் கோபப்பட்டு, இங்கிருக்கும் வண்டிகளை நொறுக்கி, தீவைத்தனர்” என்று விவரித்தார்.
இதற்குப் பிறகு இங்குள்ள மீன் சந்தையை காவல்துறையினரே தீ வைத்து எரித்ததாகவும் பாஸ்பரஸ் பொடியை தூவி எரித்ததாகவும் அதன் அருகில் உள்ள வீடுகளில் வசிப்பவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அது தவிர, அந்த மீன் சந்தையை ஒட்டி நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களையும் காவல்துறையினரே எரித்ததாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
ஜல்லிக்கட்டு போராட்டம் : அத்துமீறல் குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் தமிழக காவல் துறை
மீன் சந்தைக்குத் தீ வைக்கப்பட்டதில், அன்றைய வியாபாரத்திற்கு என வைக்கப்பட்டிருந்த மீன்களும் முழுமையாக எரிந்து, வெந்துபோய்விட்டன. ஒவ்வொருவரும் ஆயிரக்கணக்கான ரூபாய் இழப்பை இதனால் எதிர்கொண்டுள்ளனர்.
“ஒரு கிலோ ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகும் மீன்கள், கிலோ கணக்கில் இங்கு வைத்திருந்தோம். கடை வைத்திருந்த அனைவருமே பெண்கள். இப்போது எங்கு போவது, என்ன செய்வது என்று தெரியவில்லை” என்கிறார் இந்த மீன் சந்தையில் கடை வைத்திருக்கும் நாகவல்லி.
சென்னை வன்முறை; தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
காவல்துறையைப் பொறுத்தவரை இந்த தீ வைப்பு சம்பவத்திற்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை என்கிறது. மேலும், அவ்வை சண்முகம் சாலையில் கலவரக்காரர்கள் கற்களைத் தூக்கியெறிந்தும் வாகனங்களை நொறுக்கியும் கலவரத்தில் ஈடுபடும் காட்சிகளைக் கொண்ட வீடியோவை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் சென்னை நகரக் காவல்துறை வெளியிட்டுள்ளது.
நடுக்குப்பம் பஞ்சாயத்தின் தலைவரான அசோக், இவ்வளவு பெரிய தாக்குதலைச் சந்திக்கும் அளவுக்கு இப்பகுதி மக்கள் செய்த தவறு என்ன என்று கேள்வியெழுப்புகிறார். “சமூக விரோதிகள் ஒருபோதும் இங்குவந்து இருந்ததில்லை. நாங்களும் எந்த பிரச்சனைக்கும் போனதில்லை” என்கிறார் அவர்.
ஜனவரி 17ஆம் தேதி முதல் 23ஆம் தேதிவரை சென்னை மெரீனா கடற்கரையில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு ஆதரவாக போராட்டங்கள் நடந்தபோது ஆயிரக்கணக்கானவர்கள் இரவிலும் பகலிலும் கடற்கரையிலேயே தங்கியிருந்து இந்தப் போராட்டங்களை நடத்தினர். அப்போது சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்தே போராட்டக்காரர்களுக்கு உணவு தயாரித்து வழங்கப்பட்டது.
போராட்டம் முடிந்த இன்றைய மெரினா (புகைப்படத் தொகுப்பு)
அதேபோல, 23ஆம் தேதி காலையில் போராட்டக்காரர்களை கலைக்க முயன்றபோது, அவர்களில் ஒருபகுதியினர் கடலை நோக்கிச் சென்றனர். அவர்களுடன் மீனவ மக்களும் சேர்ந்துகொண்டனர். இதுவே காவல்துறையின் கோபத்திற்குக் காரணம் என்கிறார்கள் இப்பகுதி மக்கள்.
இந்தப் பகுதியில் வசிப்பவர்களின் வாழ்வாதாரமாக இருந்த மீன் சந்தை விரைவில் கட்டிக்கொடுக்கப்பட வேண்டும் என்கிறார் ஊர்த் தலைவரான அசோக். மேலும் சரியான வகையில் இழப்பீடும் வழங்கப்பட வேண்டும் என்கிறார் அவர்.
ஜல்லிக்கட்டு வன்முறை: கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வலியுறுத்தல்
தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை அனுமதிக்க வேண்டும் என்று கோரி நடந்த போராட்டம் கடந்த ஜனவரி 17ஆம் தேதி துவங்கியது. தமிழக அரசு அதற்கென அவசரச் சட்டத்தைப் பிறப்பித்த பிறகும், போராட்டக்காரர்கள் போராட்டங்களை முடித்துக்கொள்ளாததால், 23ஆம் தேதியன்று அவர்களை வலுக்கட்டாயமாக அகற்ற முயன்றபோது, சென்னை நகரம் முழுவதும் பெரும் கலவரம் வெடித்தது. இது தொடர்பாக சுமார் 180 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.