சென்னை மெரீனா கடற்கரை பகுதியில் நேற்று சனிக்கிழமை இரவு முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகர் காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சென்னை மாநகரத்தில் அமைதியை பராமரிக்கும் நோக்கிலும், நகரின் சட்டம் , ஒழுங்கை சீர்குலைக்கும் வண்ணம் சமூக விரோத சக்திகள் மற்றும் தேச விரோத சக்திகள் தீட்டும் கொடிய திட்டங்களை முறியடிக்கும் விதத்திலும் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக விளக்கமளித்துள்ளது.
இந்த தடை உத்தரவு பெப்ரவரி மாதம் 12ஆம் நாள் வரை நடப்பில் இருக்கும் என்றும், இதனால், மெரீனா கடற்கரை பகுதிகளில் பேரணி, ஆர்ப்பாட்டம், மனித சங்கிலி ஆகிய போராட்டங்களை குறிப்பிட்ட நாட்களுக்கு நடாத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை காளையடக்கும் போட்டிகளை நடாத்த வலியுறுத்தும் ஆதரவு போராட்டங்கள் நடைபெற்ற சென்னை மெரீனா கடற்கரையில், இளைஞர்கள் மீண்டும் கூட இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியதாக கூறப்படுகிறது.
இதனால் மெரீனா கடற்கரையின் நேப்பியர் பாலம் முதல் கலங்கரை விளக்கம் வரையிலான பகுதிகளில் நேற்று பிற்பகல் முதலே பெருமளவு காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.