சீனா தனது ஒரு றில்லியன் டொலர் பெறுமதியான ‘ஒரு அணை ஒரு பாதை’ என்ற திட்டத்தை வெற்றிகரமாக அமுல்படுத்துவதற்காக கேந்திர முக்கியத்துவ அமைவிடங்களில் அமைந்துள்ள நாடுகளின் பல்வேறு கட்டுமானத் திட்டங்களுக்கு தன்னாலான ஆதரவுகளை வழங்கி வருகிறது.
இதற்காக சீனாவால் இந்த நாடுகளின் அரசாங்கங்களுக்கு பெருந்தொகையான நிதி கடனாக வழங்கப்படுகிறது. இதன் பெறுபேறாக, இந்த நாடுகள் சீனாவின் கடன் பொறிக்குள் அகப்பட்டுத் தவிப்பதுடன் இந்தக் கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாததால் இந்த நாடுகள் சீனாவின் செல்வாக்கிற்கும் உட்பட்டுள்ளன.
கட்டுமானத் திட்டங்களுக்காக கடனை வழங்குவதென்பது மோசமான செயலல்ல. ஆனால் சீனாவினால் நிதி வழங்கப்படும் திட்டங்கள் எப்போதும் அந்தந்த நாடுகளின் உள்நாட்டுப் பொருளாதாரத்திற்கு ஆதரவு வழங்கும் நோக்குடன் நிறைவேற்றப்படுவதில்லை என்பதே இங்கு சுட்டிக்காட்டத்தக்க விடயமாகும்.
அத்துடன் இந்த நாடுகளின் இயற்கை வளங்களை சீனா பெற்றுக் கொள்வதுடன், சீனப் பொருட்களையும் இந்த நாடுகளில் விற்பனை செய்வதிலும் சீனா செல்வாக்குச் செலுத்துகிறது. அத்துடன் சீனா தனது நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்களை இவ்வாறான சில திட்டங்களை அமுல்படுத்துவதற்குப் பயன்படுத்துகின்றனர். இதனால் உள்நாடுகளில் உள்ள மக்கள் தமக்கான வேலை வாய்ப்புக்களைப் பெறமுடியாத நிலை காணப்படுகிறது.
சீனாவிடமிருந்து கடன் பெற்று மேற்கொள்ளப்பட்ட சில திட்டங்களுக்குத் தற்போதும் மேலும் செலவு செய்யப்பட வேண்டிய நிலையும் காணப்படுகிறது. எடுத்துக்காட்டாக, 2013ல் அம்பாந்தோட்டைக்கு அருகில் திறக்கப்பட்ட சிறிலங்காவின் மத்தல அனைத்துலக விமான நிலையமானது செயற்பாடற்று முடங்கியுள்ளது.
china-hamabantota
இதேபோன்றே அம்பாந்தோட்டை மாகம்புர மகிந்த ராஜபக்ச துறைமுகமும் எதிர்பார்த்தளவு செயற்திறனின்றிக் காணப்படுகிறது. பாகிஸ்தானில் பல பில்லியன் டொலர் செலவில் நிர்மாணிக்கப்பட்ட குவடார் துறைமுகம் போன்றே அம்பாந்தோட்டைத் துறைமுகமும் வெறுமையாகக் காணப்படுகிறது.
எனினும் சீனா இவ்வாறான திட்டங்களைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வருகிறது. குறிப்பாக, சீன நீர்மூழ்கிக்கப்பல்கள் இரண்டு தடவைகள் சிறிலங்காவின் துறைமுகங்களில் தரித்து நின்றுள்ளன. அத்துடன் அண்மையில் இரண்டு சீனப் போர்க்கப்பல்கள் குவடார் துறைமுகப் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளன.
தென் சீனக் கடலில் சீனாவானது தனது பிராந்திய உரிமையை விட்டுக் கொடுக்கக்கூடாது என்பதற்காக ஆசியான் அமைப்பின் நிலைப்பாட்டை எதிர்ப்பதற்காக கம்போடியா, லவோஸ், மியான்மார், தாய்லாந்து போன்ற நாடுகளை ஏற்கனவே தனது செல்வாக்கிற்குள் உட்படுத்தியுள்ளது. இதற்கும் மேலாக, சீனாவின் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத பல நாடுகள் தமது நாடுகளில் சீனாவின் நிதியுதவில் மேற்கொண்ட திட்டங்களை மீண்டும் சீன அரசிற்குச் சொந்தமான நிறுவனங்களிடம் விற்கவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகியுள்ளன.
நிதி நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள நாடுகளில் சீனா தனது பெரும்பான்மை உரிமையாண்மையை நிலைநிறுத்துவதற்குக் கோரிக்கை விடுத்து வருகிறது. எடுத்துக்காட்டாக, நேபாளத்தில் சீனாவிற்குச் சொந்தமான பிறிதொரு அணையை நிர்மாணிப்பதற்கு சீனா இந்த மாதம் உடன்படிக்கை மேற்கொண்டுள்ளது. இத்திட்டத்தின் 75 சதவீத உரிமையை சீன அரசிற்குச் சொந்தமான Three Gorges Corporation என்கின்ற நிறுவனம் பொறுப்பேற்றுள்ளது.
தன்னிடம் கடன்களைப் பெற்ற நாடுகள் அதிலிருந்து தப்பிச் செல்ல முடியாது என்பது உறுதிப்படுத்தும் விதமாக சீனா பல்வேறு நகர்வுகளை மேற்கொண்டுள்ளது. அதாவது கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான கால அட்டவணையை மீள வரையறுப்பதற்காக மேலும் திட்டங்களை மேற்கொள்வதற்கு தன்னிடம் கடன் பெறுமாறும் அதற்கான ஒப்பந்தங்களை மேற்கொள்ளுமாறும் சீனா கோரிக்கை விடுத்து வருகிறது.
கடந்த ஒக்ரோபரில், பாரிய புதிய ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்காக கம்போடியாவிற்கு வழங்கிய 90 மில்லியன் டொலர் பெறுமதியான கடனை சீனா தள்ளுபடி செய்தது.
அபிவிருத்தியடைந்து வரும் பொருளாதாரத்தைக் கொண்ட சில நாடுகள் சீனாவிடம் மீளவும் கடன்களைப் பெற்றுக்கொள்வதா என்பது தொடர்பில் மீள்பரிசீலனை செய்து வருகின்றன. இந்த நாடுகளைச் சேர்ந்த வேலைவாய்ப்பற்றவர்கள் பல்வேறு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக சீனாவின் பொருட்களை தமது நாடுகளில் விற்பனை செய்யக்கூடாது எனவும் இது உள்ளுர் உற்பத்திகளைப் பாதிப்பதாகவும் சீனா தனது நாட்டிலிருந்து தொழிலாளர்களை இறக்குமதி செய்வதைத் தடைசெய்யுமாறும் கோரி ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
நைஜீரியா தொடக்கம் சிறிலங்கா வரையான சில நாடுகளின் புதிய அரசாங்கங்கள் தமது நாடுகளின் முன்னைய தலைமையால் சீனாவின் திட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு ஊழல் குற்றங்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளன. பாகிஸ்தானுக்கான சீனாவுக்கான பதில் தூதுவரான சகோ லிஜியன் கடந்த மாதம் தனது கீச்சக உரையாடலில் ‘சீனாவின் திட்டங்களின் மீதான ஊழல்கள்’ தொடர்பான குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையுமில்லை எனத் தெரிவித்திருந்தார்.
சீனாவிடமிருந்து கடன்களைப் பெற்றுக் கொள்வதற்கு அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் பல முன்வருவதற்கான காரணங்களைப் புரிந்து கொள்ள முடியும். நிறுவக சார் முதலீட்டாளர்களின் புறக்கணிப்புக்களே இதற்கான முக்கிய காரணியாகும்.
இதனால் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் தமது நாடுகளில் பாரிய கட்டுமானத் திட்டங்களை மேற்கொள்வதற்கு சீனாவின் உதவியை நாடுகின்றன. இவ்வாறு சீனாவின் உதவியை நாடும் பொருளாதாரம் நலிவுற்ற நாடுகளிடம் இலகு வட்டிக்குக் கடன் கொடுப்பதாக சீனா உறுதி வழங்குகிறது.
ஆனால் பின்னர் காலப்போக்கில் சீனா தனது வர்த்தக மற்றும் மூலோபாய நலன்களை அடையும் முகமாகவே கடன்களை வழங்குகின்றன என இந்த நாடுகள் உணர்ந்து கொள்கின்றன. இந்த நாடுகள் சீனாவின் கடன்பொறிக்குள் அகப்பட்டுத் தவிக்கின்றன என்பதை காலந்தாழ்த்தியே உணர்ந்து கொள்கின்றன.
சிறிலங்கா என்பது சிறியதொரு தீவாகக் காணப்பட்டாலும் கூட, இது சீனாவின் கிழக்குத் துறைமுகங்களுக்கும் மெடிற்றறேனியனுக்கும் இடையில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ளது. சிறிலங்காவானது சீனாவின் பட்டுப் பாதைத் திட்டத்தை அமுல்படுத்துவதில் முக்கியத்துவம் பெறுவதாக சீன அதிபர் ஜி ஜின்பிங்க் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் ஒன்பது ஆண்டுகால அதிகாரத்துவ ஆட்சியின் போது சிறிலங்காவின் சீனா அதிகம் முதலீடு செய்ய ஆரம்பித்தது. அத்துடன் ஐக்கிய நாடுகள் சபையில் ராஜபக்சவிற்கு எதிரான போர்க் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட போது ராஜபக்சவிற்கு ஆதரவாக சீனா செயற்பட்டது.
இதன் பின்னர் சீனா சிறிலங்காவின் பாரிய முதலீட்டுள்ளாராகவும் கடன் வழங்கும் நாடாகவும் மாறியது. இது சிறிலங்காவின் இரண்டாவது பெரிய வர்த்தகப் பங்காளியாகவும் மாறியது.
2015 அதிபர் தேர்தலில் ராஜபக்ச எதிர்பாராத தேர்தல் தோல்வியைச் சந்திக்கும் வரை சீனாவின் செல்வாக்கு சிறிலங்காவில் விரிவடைந்தது. இதன் பின்னர் மைத்திரிபால சிறிசேன நாட்டின் அதிபராகினார். இவர் தனது தேர்தல் பரப்புரையின் போது சீனாவின் கடன் பிடிக்குள்ளிருந்து சிறிலங்காவை மீட்டெடுப்பேன் என வாக்குறுதி வழங்கினார். ஆட்சிக்கு வந்த கையோடு சீனாவின் பாரிய திட்டங்கள் சிலவற்றை சிறிசேன இடைநிறுத்தினார்.
ஆனாலும் சீனாவின் கடனைத் திருப்பிச் செலுத்தும் இடர்நிலைக்கு உட்பட்ட சிறிலங்கா மீண்டும் சீனாவுடன் சமரசப் பேச்சுக்களை நடத்தியதுடன் இடைநிறுத்தி திட்டங்களில் சில மாற்றங்களைக் கொண்டு வந்து அத்திட்டங்கள் மீண்டும் தொடர்வதற்கான அனுமதியை வழங்க வேண்டிய நிலை புதிய அரசாங்கத்திற்கு ஏற்பட்டது. இதனால் இடைநிறுத்தப்பட்ட 1.4 பில்லியன் டொலர் பெறுதியான கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் போன்ற திட்டங்கள் மீளவும் ஆரம்பிக்கப்பட்டன.
1.1 பில்லியன் டொலர் பெறுமதிக்கு அம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் 80 சதவீத உரிமையை சீனாவிற்கு வழங்குவதாக சிறிசேன ஏற்கனவே உடன்பட்டுள்ளார். சிறிலங்காவிற்கான சீனாவின் தூதுவரான ஜி ஜியான்லியாங்க்கின் கூற்றின் பிரகாரம் தற்போது ஏனைய திட்டங்களின் உரிமையை சீனா சிறிலங்காவிடமிருந்து பெற்றுக் கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன.
சிறிலங்கா தனது நிதிப் பிரச்சினையிலிருந்து மீளெழுவதற்காக உதவுவதற்காகவே சீனா இதில் ஈடுபடுவதாகவும் தூதுவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் சீனாவின் பொறிக்குள் சிறிலங்காவைச் சிக்கவைத்து விட்டதாக, சிறிசேன மீது முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.
சீனா தனது வெளிநாட்டு, பொருளாதார, பாதுகாப்புக் கோட்பாடுகளை மேலும் மேம்படுத்துவதற்காக, பிற நாடுகளுடன் வர்த்தக, தொடர்பாடல், போக்குவரத்து மற்றும் பாதுகாப்புத் தொடர்புகளை முன்னேற்றி வருகிறது. சீனாவிடமிருந்து கடன் பெற்ற நாடுகள் தமது கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் உள்ள போது சீனா இந்த நாடுகளைத் தனது இலக்கை அடைந்து கொள்வதற்குப் பயன்படுத்துகிறது.
ஆகவே சீனாவின் கடன் பொறியானது நிச்சயமாகக் கவனத்திற் கொள்ளப்பட வேண்டும். அத்துடன் சீனாவின் கடன் பொறிக்குள் விழுந்து விடாது தம்மைக் காப்பாற்றிக் கொள்வதற்காக சிறிய நாடுகள் எந்த நடவடிக்கைகளையாவது மேற்கொள்ள வேண்டும்.