அமெரிக்காவின் முக்கியத்துவம் வாய்ந்த வெளியுறவுத்துறை மந்திரியாக எண்ணெய் நிறுவன தலைவரான ரெக்ஸ் டில்லர்சன் பொறுப்பேற்க உள்ளார். இவரது நியமனத்தை செனட் சபை உறுதி செய்துள்ளது.
அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள டொனால்டு டிரம்ப், தனது அமைச்சரவை உறுப்பினர்கள், தூதர்கள் மற்றும் பல்வேறு ஆலோசனைக் குழுக்களின் உறுப்பினர்களை தேர்வு செய்து நியமனம் செயது வருகிறார். அவ்வகையில் முக்கியத்துவம் வாய்ந்த வெளியுறவுத்துறை மந்திரியாக ரெக்ஸ் டில்லர்சனை(வயது 64) டிரம்ப் தேர்வு செய்துள்ளார்.
எக்சான் மொபில் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாகியான டில்லர்சன் நியமனம் தொடர்பாக செனட் சபையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், 56-43 என்ற விகிதத்தில் டில்லர்சன் நியமனம் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, வெள்ளை மாளிகையில் நடந்த பதவியேற்பு நிகழ்ச்சியில், அதிபர் டிரம்ப் முன்னிலையில் வெளியுறவுத்துறை மந்திரியாக டில்லர்சன் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு துணை அதிபர் மைக் பென்ஸ் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
அரசியலுக்கு புதுவரவான டில்லர்சன், அமெரிக்காவின் பகை நாடான ரஷ்யாவுடன் நெருங்கிய தொடர்பு வைத்துள்ளதால் அவர் வெளியுறவுத்துறை மந்திரியாக நியமிப்பது குறித்து கடும் சர்ச்சை எழுந்தது. இதனால் செனட் சபையில் அவருக்கு எதிராக ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் குரல் கொடுத்தனர். ஆனால், வாக்கெடுப்பில் அவர் வெற்றி பெற்று வெளியுறவுத்துறை மந்திரியாக தேர்வு பெற்றிருக்கிறார்.
இந்த வாய்ப்பினை வழங்கிய அதிபர் டிரம்ப்புக்கு டில்லர்சன் நன்றி தெரிவித்துள்ளார்.