அமெரிக்காவின் புதிய அதிபரான டொனால்டு டிரம்ப், அதிரடி நடவடிக்கையாக ஈரான், சிரியா உள்ளிட்ட 7 முஸ்லீம் நாடுகளில் உள்ள குடிமக்களுக்கான அமெரிக்க விசாவை தடை செய்தார்.
இதற்கு பதிலடியாக ஈரான் நாட்டில் நுழைவதற்கு அமெரிக்கர்களுக்கு தடை விதித்தது ஈரான் அரசு. அத்துடன் ஈரான் அதிபர் ஹசன் ருஹானி, டிரம்பை கடுமையாக விமர்சித்தார். மேலும், கடந்த சில நாட்களுக்கு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதனை செய்தும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஈரானின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்காக கடும் கண்டனம் தெரிவித்தது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தை மீறும் வகையில் ஈரான் ஏவுகணை சோதனை நடத்தியிருப்பதால், நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்திருந்தது. ஆனால், இதனை பொருட்படுத்தாத ஈரான், அனுபவமில்லாத நபரின் அச்சுறுத்தல் பயனற்றது என்று கூறிய ஈரான், எந்த நடவடிக்கையையும் சந்திக்க தயார் என்று சவால் விட்டது.
இந்த சூழ்நிலையில், ஈரான் மீது டிரம்ப் நிர்வாகம் புதிய பொருளாதார தடைகளை விதித்துள்ளது. சீனா, லெபனான், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நிறுவனங்கள் உள்பட 12 நிறுவனங்கள், 13 நபர்களை குறிவைத்து இந்த தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
இதையடுத்து, அமெரிக்காவுக்கு எதிராக விரைவில் பதில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஈரான் தெரிவித்துள்ளது.
இது குறித்து ஈரான் வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பிராந்தியத்தில் பயங்கரவாத இயக்கங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் செயல்படும் சில அமெரிக்க தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு தடை விதிக்க உள்ளோம். அந்த நபர்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
ஏவுகணை மேம்பாடு மற்றும் அவற்றின் செயல்திறன் அனைத்தும் தற்காப்பு நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு தவிர மற்ற நடவடிக்கைகளுக்கு ஒருபோதும் அவை பயன்படுத்தப்படாது. இது ஈரான் மக்களின் உரிமை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.