காதலர் தினம் பிப்ரவரி 14-ந்தேதி உலகெங்கும் கொண்டாடப்பட உள்ளது. காதலர்கள் அன்று ரோஜா மலர்களை பரிமாறி தங்கள் அன்பை வெளிப்படுத்தி மகிழ்வார்கள்.
மாதக்கணக்கில் காதலை வெளிப்படுத்தாத இளவட்டங்கள் அன்றைய தினத்தில் ரோஜா மலர்களை கொடுத்து தங்கள் காதலை தெரிவிப்பார்கள். இளம்ஜோடி முதல் காதல் திருமணம் செய்தவர்கள் வரை தங்கள் அன்பை தெரிவிக்க ரோஜா மலர்களையே அதிகம் வழங்குவார்கள்.
நீலகிரி மாவட்டத்தில் தேயிலை, காய்கறி பயிர்களுக்கு அடுத்தபடியாக மலர்ச்செடிகள் அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது. ஊட்டி, கேத்தி, கோத்தகிரி, கொடநாடு உள்ளிட்ட பகுதிகளில் பசுமை குடில்கள் அமைக்கப்பட்டு மலர்ச்செடிகளை சாகுபடி செய்து வருகிறார்கள்.
சிகப்பு, மஞ்சள், ஊதா உள்பட பல வண்ணங்களில் இருந்தாலும் காதலர் தினத்திற்கு சிகப்பு ரோஜாக்கள் மட்டுமே அதிகளவில் விற்பனையாகும்.
மொட்டுக்களாக பறிக்கப்படும் ரோஜாக்கள் மாவட்டத்தின் பிறபகுதிகள், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்கு அதிகளவு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
தற்போது நீலகிரி மாவட்டத்தில் காதலர்களை மகிழ்விக்க 5 லட்சம் ரோஜா மலர்கள் ஏற்றுமதிக்கு தயாராக உள்ளது.