வடமாகாண போக்குவரத்து அமைச்சர் ப. டெனீஸ்வரனின் உருவபொம்மை எரியூட்டப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், இனிவரும் காலங்களில் வடபகுதியிலுள்ள மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்களின் பிரதிநிதிகளின் உருவபொம்மைகளை எரியூட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் போராட்டம் ஒன்றினை நடத்தவுள்ளதாக தனியார் பேருந்து சங்கம் தெரிவித்துள்ளது.
வடமாகாண தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் ஒன்றிணைந்து வியாழக்கிழமை(09) இக் கவனயீர்ப்புப் போராட்டத்தினை மேற்கொள்ளவுள்ளதாக வவுனியா மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் எஸ். இராஜேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அவர்,
கடந்த 03 ஆம் திகதி வவுனியா உட்பட வடமாகாணத்திலுள்ள இ.போ.ச சாலைகளில் வடமாகாண போக்குவரத்து அமைச்சர் ப. டெனீஸ்வரனின் உருவபொம்மை எரியூட்டப்பட்டுள்ளது.
இச் செயற்பாட்டினை முற்றிலும் வன்மையாக கண்டிப்பதுடன் எம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட வடமாகாண மக்கள் பிரதிநிதிகளின் உருவபொம்மைகளை இனி வரும் காலங்களில் எரியூட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாகவே இப் போராட்டம் நடத்தப்படுகின்றது.
குறித்தப் போராட்டம் வியாழக்கிழமை(09) காலை ஏழு மணிக்கு வவுனியாவிலிருந்து பேருந்தில் பேரணியாக யாழ்பாணம் வரை செல்லவுள்ளது.
பின்னர் புனித அடைக்கலமாதா ஆலய முன்றலில் வடமாகாண தனியார் பேருந்து சங்கங்கள் ஒன்றிணைந்து வடமாகாண ஆளுநர், வடமாகாண முதலமைச்சர் ஆகியோரின் அலுவலகங்களுக்கு பேரணியாகச் சென்று மனுக்கொடுக்க உள்ளோம்.
வடமாகாணத்திலுள்ள ஐந்து தனியார் பேருந்து உரிமையாளர்களும் ஒன்றிணைத்து இம் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இவ் கவனயீர்ப்புப் பேரணியில் தனியார் பேருந்து சாரதிகள், நடத்துனர்கள், பணியாளர்கள் என அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
மேலும் நாம் மேற்கொள்ளும் கவனயீர்ப்புப் போராட்டத்தின் காரணமாக பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு மனம் வருந்துகின்றோம்.
எமது நியாயமான இப் போராட்டத்திற்கு வவுனியா மாவட்ட பொது அமைப்புக்கள் அனைவரும் தமது பூரண ஒத்துழைப்பினை வழங்குமாறு அவர் மேலும் தெரிவித்தார்.