பிரான்ஸ் தலைநகர் பாரீசுக்கு அருகே 22 வயது வாலிபர் ஒருவரை கடந்த 2-ந் தேதி போலீசார் கைது செய்தனர். அந்த இளைஞரை பயங்கரமாக சித்ரவதை செய்த அவர்கள், பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தி இருந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 4 போலீஸ் அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டு, அவர்கள் மீது விசாரணையும் நடந்து வருகிறது.
இளைஞரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய போலீசாரை கண்டித்து பாரீசின் புறநகர் பகுதியான அல்னே-சோயுஸ்-போயிசில் மக்கள் தெருக்களில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். ஏராளமான இளைஞர்களும் பங்கேற்ற இந்த போராட்டத்தில் கலவரம் வெடித்தது. இது அருகில் உள்ள சேரிப்பகுதிகளுக்கும் பரவியது.
தொடர்ந்து 4-வது நாளாக நேற்று முன்தினம் இரவில் நடந்த போராட்டத்தில் 10 வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதனால் அவை முற்றிலும் எரிந்து நாசமாயின. இதில் பஸ் டிரைவர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. இந்த கலவரம் தொடர்பாக 12 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசாரின் சித்ரவதைக்கு ஆளான அந்த வாலிபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டே நேற்று முன்தினம் சந்தித்து ஆறுதல் கூறினார்.