அரச காணிகளை இராணுவத்தின் பயன்பாட்டுக்காக எடுத்துக் கொண்டு பொதுமக்களின் காணிகளை விரைவில் விடுவிப்பது குறித்து பரிசீலனை மேற்கொள்வதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு முன்னால் தொடர்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களில் சிலர் இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.
இந்த சந்திப்பின்போதே விரைவில் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் தம்மிடம் தெரிவித்ததாகவும், எனினும் காணிகள் விடுவிக்கப்படும் வரை தமது போராட்டம் தொடரும் என தாம் தெரிவித்ததாகவும் இன்றைய சந்திப்பில் கலந்து கொண்ட மக்கள் தெரிவித்தனர்.
இன்றைய சந்திப்பில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சார்ல்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.