அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பிறப்பித்த நிர்வாக உத்தரவுகளுக்கு பணியாத அட்டார்னி ஜெனரல் சேலி யேட்ஸ் கடந்த மாத இறுதியில் நீக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து தற்காலிக அட்டார்னி ஜெனரலாக வர்ஜீனியா கிழக்கு மாவட்ட அட்டார்னி ஜெனரல் டானா போயெண்டே நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில் புதிய அட்டார்னி ஜெனரலாக அலபாமா மாகாணத்தை சேர்ந்த ஜெப் செசன்ஸ் என்னும் செனட் சபை எம்.பி.யை டிரம்ப் நியமனம் செய்தார். ஆனால் அவரது நியமனம் பெருத்த சர்ச்சையை எழுப்பியது.
இது தொடர்பான விசாரணை, பாராளுமன்ற செனட் சபையில் நடந்து வந்தது. அப்போது இருவேறு கருத்துகள் வெளிப்பட்டன.
இறுதியில் இது ஓட்டெடுப்புக்கு விடப்பட்டது.
ஓட்டெடுப்பில் ஜெப் செசன்ஸ் நியமனத்துக்கு ஆதரவாக 52 ஓட்டுகள் கிடைத்தன. எதிராக 47 ஓட்டுகள் விழுந்தன. எனவே அவரது நியமனத்துக்கு செனட் சபையின் அங்கீகாரம் கிடைத்து விட்டது.
ஓட்டெடுப்புக்கு பின்னர் ஜெப் செசன்ஸ் பேசுகையில், “இந்த பதவியின் மேலான பொறுப்புகளை நான் முழுமையாக உணர்ந்துள்ளேன்” என குறிப்பிட்டார்.
இதன்மூலம் நீதித்துறைக்கு ஜெப் செசன்ஸ் பொறுப்பேற்பார். 1 லட்சத்து 13 ஆயிரம் ஊழியர்களும், 93 அட்டார்னிகளும் அவரது நேரடி கட்டுப்பாட்டின் கீழ் வருவார்கள்.