பிலிப்பைன்ஸ நாட்டில் மின்டானயோ தீவில் உள்ள சுரிகாயோ டெல் நோர்டே மாகாணத்தில் நேற்று இரவு கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மாகாண தலைநகர் சுரிகாயோ மற்றும் அதை சுற்றியுள்ள வீடுகள் குலுங்கின.
அப்போது அயர்ந்து தூங்கி கொண்டிருந்த மக்கள் அலறியடித்தபடி எழுந்து தெருக்களில் ஓட்டம் பிடித்தனர். கடும் குளிரிலும் பாதுகாப்பான இடங்களை தேடிச் சென்று தஞ்சம் அடைந்தனர்.
வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்தன. ஏராளமான வீடுகளில் பெரிய அளவில் கீறல்கள் விழுந்தன. தகவல் அறிந்ததும் பேரிடர் மீட்பு படையினர் அங்கு விரைந்தனர். இடிபாடுகள் அகற்றப்பட்டன.
இந்த நிலநடுக்கத்தில் இடிபாடுகளில் சிக்கி 3 பேர் பலியாகினர். 80 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.
நிலநடுக்கம் காரணமாக பல கட்டிடங்கள், பள்ளிகள் இடிந்தன. சுரிகாயோ நகரில் இருந்த பாலம் இடிந்து தரை மட்டமானது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. அதனால் அப்பகுதி முழுவதும் இருளில் மூழ்கியது.
சுரிகாயோவில் உள்ள விமான நிலைய ஒடு தளத்தில் கீறல்கள் ஏற்பட்டன. அதனால் அந்த விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது. லிபாடா துறைமுகமும் மூடப்பட்டது.
இதற்கிடையே 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானதாக அறிவிக்கப்பட்டது.