சீட்டா எனப்படும் கனடாவுக்கும் ஐரோப்பிய ஒன்றித்திற்கும் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தினை நடைமுறைப்படுத்துவதற்கான அங்கீகாரம் இன்று ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றில் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறித்த இந்த ஒப்பந்தம் குறித்து பல ஆண்டுகளாக பேசப்பட்டு வந்த போதிலும், நீண்டகால இழுபறியில் காணப்பட்ட இந்த ஒப்பந்தம் அண்மையில் கைச்சாத்திடப்பட்டுள்ள போதிலும், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான ஆங்கீகாரத்தினை ஐரோபிய ஒன்றித்திலுள்ள அனைத்து உறுப்பு நாடுகளும் வழங்க வேண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான நிலையிலேயே குறித்த அந்த ஒப்பந்தத்தின் மீதான வாக்கெடுப்பு இன்று ஐரோப்பிய நாடாளுமன்றில் நடாத்தப்படவுள்ளது.
பல்வேறு அனைத்துலக வர்த்தக உடன்படிக்கைகளில் இருந்து பின்வாங்குவது குறித்தும், உலகமயமாக்கல் கொள்கைகளுக்கு மாறுபட்ட வகையிலும் அமெரிக்காவின் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் கருத்துக்களை வெளியிட்டுவரும் நிலையில், கனடாவுக்கும் ஐரோப்பிய ஒன்றித்திற்கும் இடையேயான இநத் ஒப்பந்தம் பல்வேறு தரப்பினரின் அவதானத்தையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதுவேளை நாளை ஐரோப்பாவுக்கான பயணம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ள பிரதமர் ஜஸ்டின் ரூடோ, குறித்த இந்த ஒப்பநதத்திற்கு எதிராக கருத்துக்களை கொண்டுள்ளவர்களுக்கு, இந்த ஒப்பந்தம் மூலம் இரண்டு தரப்புக்கும் ஏற்படக்கூடிய அனுகூலங்க்ள் குறித்து விளக்கமளிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
நாளை இது குறித்து ஐரோப்பிய நாடாளுமன்றில் உரையாற்றவுள்ள அவர், யேர்மனியில் ஐரோப்பாவின் முதன்நிலை வர்த்தக பிரமுகர்களுடன் பேச்சுக்களிலும் ஈடுபடவுள்ளார்.
கனேடிய பிரதமர் ஒருவர் இவ்வாறு ஐரோப்பாவின் முக்கிய வர்த்தக பிரமுகர்களுடன் இவ்வாறான மாநாடு ஒன்றினை நடாத்துவது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை குறி்தத இந்த ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐரோப்பிய நாடாளுமன்றுக்கு வெளியே நேற்று கூடிய நூற்றுக்கணக்கானோர், இந்த ஒப்பந்தத்தினால் தமது வேலை வாய்ப்புகள் பறிபோவது மட்டுமல்லாது, உணவுப் பாதுகாப்பு, சுற்றுச் சூழல் பாதுகாப்பு போன்றவற்றுக்கும் ஆபத்து ஏற்படும் என்று எச்சரித்துள்ளனர்.