சொத்து குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட் தண்டனை உறுதிபடுத்தியை அடுத்து அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா உள்ளிட்ட மூவரும் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதனிடையே, அ.தி.மு.க சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, நேற்று இரவு சுமார் 8 மணியளவில் ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்தார். அவருடன் ஜெயக்குமார், உதயகுமார் உள்ளிட்ட 10 அமைச்சர்களும் உடன் சென்றனர்.
எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுகவினர் சந்தித்த பிறகு முதல்வர் பன்னீர் செல்வம் தலைமையிலான அதிமுகவினர் ஆளுநரை சந்தித்தனர்.
தமிழக அரசியல் சூழ்நிலை உச்சகட்ட பரபரப்பு நிலையை எட்டியுள்ள நிலையில், ஆளுநர் வித்யா சாகர் ராவிடம் இருந்து இன்று முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே சசிகலாவும், ஓ.பன்னீர் செல்வமும் உரிமை கோரிய நேரத்தில் கவர்னர் இது சம்பந்தமாக முடிவு எடுக்க முடியாமல் திணறி வந்தார். சசிகலா மீதான வழக்கில் தீர்ப்பு வருவதால் தான் அவர் இதில் முடிவு எடுக்காமல் தள்ளிப்போடுவதாக கூறப்பட்டது.
ஆனால், இப்போது தீர்ப்பு வழங்கப்பட்டதை தொடர்ந்து சசிகலா தரப்பில் இருந்து புதிய சட்டமன்ற தலைவரையும் தேர்வு செய்து விட்டனர். எனவே, எந்த குழப்பமும் இல்லை. 10 நாட்களாக நீடித்து வந்த இந்த பிரச்சனைக்கு கவர்னர் தீர்வு காண வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகிய இருவரில் எந்த தரப்பை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு என்று எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது.
124 எம்.எல்.ஏ-க்களில் ஆதரவு உள்ளதாக பழனிச்சாமி தரப்பினர் உறுதியாக தெரிவிப்பதால அநேகமாக அவர் இன்று முதலமைச்சராக பொறுப்பேற்பதற்கும் வாய்ப்புள்ளது. இருப்பினும் நம்பிக்கை வாக்கெடுப்பு சட்டமன்றத்தில் நடத்தப்படும் என்று ஆளுநர் அறிவித்தால் வாய்ப்பு யாருக்கு என்ற குழப்பம் சற்றே நீடிக்கும்.