காணிகளை விடுவிக்கக் கோரி, நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கி வருபவர்களை விமானப்படையினர், புகைப்படம் எடுத்து அச்சுறுத்தலை விடுவித்து வருவதாக கேப்பாபுலவு மக்கள் தெரிவித்துள்ளனர். கேப்பாபுலவு – பிலக்குடியிருப்பு மக்களின் போராட்டம் இன்று 17ஆவது தொடர்கின்றது.
முல்லைத்தீவு மாவட்டம் நந்திக்கடலுக்கு கிழக்காக அமைந்துள்ள பிலவுக்குடியிருப்பில் உள்ள, 84 குடும்பங்களுக்கச் சொந்தமான காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த 31ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட மக்களின் தொடர் போராட்டம் தீர்வின்றி இன்றும் முன்னெடுக்கப்படுகிறது.
இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து, அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலர் போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் முன்னெடுத்துள்ளனர்.
அதேவேளை, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாபிலவு மற்றும் புதுக்குடியிருப்பு மக்களை சித்தார்த்தன் தலைமையிலான வடக்கு மாகாணசபை உறுப்பினர் கந்தையா சிவநேசன் உள்ளிட்ட பிரமுகர்கள் இன்று நேரில் சென்று அவர்களது போராட்டத்திற்கு ஆதரவைத் தெரிவித்தனர்.
கேப்பாபுலவு போராட்டத்தில்ஈடுபடும் மக்களை பைனாகுலர் வழியாக விமான படையினர் கண்காணித்து வருவதுடன் இது வரை காலமும் தமது கையடக்க தொலைபேசி ஊடாக புகைப்படம் எடுத்த விமான படையினர் இன்று தொழில் ரீதியான புகைப்பட கமராக்களை பயன்படுத்தி போராட்டத்தில் ஈடுபடும் மக்களை புகைப்படம் எடுத்தனர்.