ஜோர்க் பகுதி கல்விச்சபை உறுப்பினர், ஜூனிற்றா நாதன், மார்க்கம்-தோர்ன்கில் தொகுதியில் லிபரல் வேட்பாளராக போட்டியிட உள்ளார். ஜூனிற்றா ஒரு சமூக சேவையாளர், ஆர்வலர் மற்றும் நீண்டகாலமாக மார்க்கத்தில் வசித்துவருபவர். அவருடைய கல்வி, சமூக வேலை திறன், கல்விச் சபை உறுப்பினராகப் பெற்ற பட்டறிவு ஆகியன, ஜூனிற்றாவை மார்க்கம்-தோர்ன்கில் தொகுதி மக்களின் வலுவான பிரதிநிதி ஆக்குகின்றன.
கடந்த சில தினங்களில் ஜூனிற்றாவின் வேட்புமனுவை ஆதரித்து 1000க்கு மேற்பட்ட தொகுதி மக்கள் லிபரல் கட்சி உறுப்பினராக ஆகியிருக்கிறார்கள். “கடந்த சில தினங்களாக எனக்குக் கிடைத்த ஆதரவு என்னைப் பிரமிக்க வைக்கிறது” என ஜூனிற்றா தெரிவித்தார்.
“கல்விச் சபை உறுப்பினராகவும், நீண்டகால மார்க்க வாசியாகவும், எமது சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை நன்கறிவேன். எமது ஒருங்கிணைந்த குரலாக நாடாளுமன்றத்தில் ஒலிப்பதற்கும், தொகுதி மக்களோடு இணைந்து பொருளாதார வலுவான, சமூக நிறைவான சமுதாயத்தைக் கட்டியெழுப்புவதற்கும் வாய்ப்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன்” என்றார்.
ஜூனிற்றா, மக்களால் நேர்மையான முறையில் தேர்ந்தெடுக்கும் திறந்த தேர்வு முறையை (open nomination process) வரவேற்கிறார். அதுவே லிபரல் கட்சியை வலுவான கட்சியாக ஆக்கும் என்பதே ஜூனிற்றாவின் அசைக்கமுடியாத நம்பிக்கை. ”மார்க்கம்-தோர்ன்கில் மக்களுக்கு அவர்களை யார் நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்பதை தெரிவுசெய்யும் உரிமை கிடைக்கவேண்டும்” என ஜூனிற்றா மேலும் தெரிவித்தார்.
ஜோர்க் பகுதி 7, 8 ஆம் வட்டாரக் கல்விச் சபை உறுப்பினராக, ஜூனிற்றா பெற்றோர், மாணவர்களை உள்வாங்கி, பாடசாலைகளில் அவர்களின் பங்களிப்பை கூட்டியிருக்கிறார். பல்லின மக்களின் பண்பாட்டு விழுமியங்களை பாடசாலை மட்டத்திலும், கல்விச்சபை மட்டத்திலும் வெளிக்கொணருவதில் முக்கிய பங்காற்றியிருக்கிறார்.
ஜூனிற்றா நாதன் 2014 ஆம் ஆண்டு நடந்த ஜோர்க் பகுதிக் கல்விச் சபைத் தேர்தலில் மார்க்கம் நகரத்தில் தெரிவான அனைத்து உறுப்பினரையும் விட மிக அதிகமாக வாக்குகளைப் பெற்று வென்றிருந்தார். அத்தோடு, Queen Elizabeth II Diamond Jubilee Medal வென்றவரும் ஆவார். கனடிய மனநல அமைப்பின் இயக்குனராக பணியாற்றியவர். அவர் தொடர்ந்தும், சமூக ஈடுபாட்டை, குறிப்பாக இளம்பெண்களின் சமூக வேலைத்திட்டங்களை ஊக்குவிப்பவர். ஜூனிற்றா அவர்கள், மார்க்கம்-தோர்ன்கில் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக ஒட்டாவாவில், தொகுதி மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்புக் கிட்டும் என எதிர்பார்க்கிறார்