இறுதிக்கட்டப் போரின் போது இழைக்கப்பட்ட போர்க் குற்றங்கள் குறித்து அதிகாரத்தில் உள்ளவர்களால் போதுமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்திற்குமான பணியகத்தால் முன்னெடுக்கப்படும் பொருளாதார ஊக்குவிப்பு வேலைத் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் பங்கேற்று உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
போரானது வன்முறை நிறைந்தது எனவும், கொடூரமானது என்றும் கூறுவது மாத்திரம் போதாது எனவும், பேரானாலும் அனைத்துலக விதிமுறைகள் பிற்பற்றப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்திய அவர், பொறுப்புகூறல் மற்றும் நியாயத்திற்காகவே மக்கள் ஏங்கிக்கொண்டிருக்கின்றார்கள் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
போர்க்குற்றங்கள் தொடர்பில் போதுமான நடவடிக்கை எடுப்பதில் அதிகாரத்தில் இருப்பவர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர் எனவும், நல்லாட்சி அரசாங்கம் நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமை போன்ற விடயங்களுக்கு பதிலாக கடந்தகாலத்தை மூடிமறைப்பதற்கு முயல்கின்றதா என்கின்ற எண்ணம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொறுப்புகூறல் தொடர்பில் மக்கள் மத்தியில் கரிசனை காணப்படுகின்றது எனவும், காணாமல்போன தமது உறவுகள் உயிருடன் இருக்கின்றார்களா இல்லையா என்பதை அறிய அவர்கள் விரும்புகின்றனர் எனவும் தெரிவித்துள்ள அவர், காணாமல் போனோருக்கான அலுவலகம் வடிவமைக்கப்பட்டுள்ள போதிலும், அது இதுவரை செயற்படுத்தப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசியலமைப்பு மறுசீரமைப்புக்கள் குறித்த குழுக்கள் அமைக்கப்பட்டுள்ள போதிலும் அவர்களின் அறிக்கைகள் தொடர்ந்தும் முடக்கப்பட்டுள்ளன எனவும், இவ்வாறான திட்டமிட்ட தாமதங்களுக்கு ஜெனிவாவிலும் அரசாங்கத்திற்கு புத்துயிர் வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
நம்மை ஆட்டிப்படைக்கும் பல பிரச்சினைகளுக்கு தீர்வை பெறுவதற்காக, மனஉளைச்சல் தரும் பல்வேறு ஏமாற்றங்களுக்கு மத்தியில், தொடர்ந்தும் தாம் ஊக்கத்துடன் செயற்படுவதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
2015 ஆம்ஆண்டு நிறைவேற்றப்பட்ட ஒருமித்த தீர்மானத்தில் பல விடயங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன எனவும், அதில் வழங்கப்பட்டுள்ள உறுதி மொழிகளை மீட்டிப்பார்க்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தான் வெளிநாட்டில் இருந்த போது, நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் இடம்பெற்ற வன்முறைகள் மற்றும் மிரட்டிபணம் பறிக்கும் சம்பவங்கள் குறித்த தகவல்கள் தனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதாகவும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மனித குலத்திற்கு இழைக்கப்பட்ட அட்டூழியங்கள் மற்றும் கொடூரங்கள் பற்றிய உண்மையை வெளிக்கொண்டு வருவதற்கான போர்க் குற்றவிசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், அவற்றை மூடிமறைப்பது சரியானது அல்ல என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்