அமெரிக்காவுக்கான அனைத்து கல்விச் சுற்றுலாத் திட்டங்களையும் நிறுத்துவதாக ரொரன்ரோ மாவட்ட பாடசாலைகள் சபை அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விதித்துவரும் பயணத் தடைகளால் ஏற்பட்டுள்ள சிக்கல்கள், குழப்பங்கள் காரணமாகவே, கனடாவின் மிகப்பெரிய பாடசாலைகள் சபையான ரொரன்ரோ மாவட்ட பாடசாலைகள் சபை இந்த முடிவினை மேற்கொண்டுள்ளது.
அந்த வகையில் தமது பாடசாலை மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்கான அமெரிக்க பயணங்கள் அனைத்தும் நிறுத்தப்படுவதாகவும், மறு அறிவித்தல் வரையில் புதிதாக அமெரிக்க பயணங்கள் எவையும் ஏற்பாடு செய்யப்பட மாட்டாது எனவும் ரொரன்ரோ மாவட்ட பாடசாலைகள் சபை விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் புதிய நிர்வாகத்தினால் விதிக்கப்பட்டுவரும் பயணத் தடைப் பட்டியலில் கனடா உள்ளடக்கப்படவில்லை என்ற போதிலும், தமது பாடசாலையில் பயிலும் மாணவர்கள் சிலர் இந்த தடையினால் அசெளகரியங்களை எதிநோக்கக்கூடும் என்று பாடசாலைகள் சபை தெரிவித்துள்ளது.
உரிய ஆவணங்கள் காணப்படுகின்ற போதிலும், தமது மாணவர்கள் சிலர் அமெரிக்காவுடனான எல்லைச் சாவடிகளில் வைத்து திருப்பி அனுப்பப்படும் சம்பவங்கள் நிகழக்கூடும் எனவும், தமது மாணவர்கள் இவ்வாறானதொரு இக்கட்டினைச் சந்திக்கும் நிலை ஏற்படுவதனை தாம் விரும்பவில்லை எனவும் அது விளக்கமளித்துள்ளது.
இந்த முடிவானது அவ்வப்போது மீள் பரிசீலனை செய்யப்படும் எனவும், மாணவர்கள் அமெரிக்க எல்லையில் எவ்வாறான சிக்கல்களை எதிர்நோக்கக்கூடும் என்ற விபரங்களை தாம் தொடர்ந்து பெற்று வருவதாகவும், எனினும் தற்போது தம்மிடமுள்ள தரவுகளின் அடிப்படையில், இது சரியான முடிவு என்றே தோன்றுவதாகவும் ரொரன்ரோ மாவட்ட பாடசாலைகள் சபை மேலும் தெரிவித்துள்ளது.
கனடாவின் மிகப்பெரிய பாடசாலைகள் சபையான ரொரன்ரோ மாவட்ட பாடசாலைகள் சபையின்கீழ் சுமார் 600 பாடசாலைகளும், சுமார் 2,46,000 மாணவர்களும் உள்ளதுடன், கனடாவுக்கு குடிபெயர்ந்துள்ள பெருமளவான புலம்பெயர் சமூகங்களையும் கொண்டுள்ள பகுதியாக ரொரன்ரோ காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.