இலங்கையை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துவது சாத்தியமற்றது என்றும், அவ்வாறு செய்ய முடியும் என்று கூறுவோருடன் பகிரங்க விவாதத்தை நடத்துவதற்கு தாம் தயார் எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுமந்திரன் சவால் விடுத்துள்ளார்.
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் சிவன்கோவில் வளாகத்தில் நடைபெற்ற தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் குறித்து மக்களை தெளிவுபடுத்தும் சந்திப்பிலேயே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையை அனைத்துலக நீதிமன்றத்தில் நிறுத்த முடியாது என்று அறிந்திருந்தும், தமது குறுகிய அரசியல் நோக்கத்திற்காக மக்களின் உரிமைகளை குழி தோண்டி புதைக்கும் செயற்பாட்டில், கால அவகாசம் வழங்கக் கூடாது என்று கூறுவோர் ஈடுபட்டுள்ளனர் எனவும் அவர் சாடியுள்ளார்.
ஐ.நா தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு காலஅவகாசம் வழங்கக் கூடாது என்று வலியுறுத்தி அனுப்பட்ட கடிதங்களில், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் பொறிமுறை பிரயோசனம் அற்றது எனவும் இலங்கையை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபை தலையிட்டு மாற்றத்தை ஏற்படுத்திய வெற்றிக்கதையொன்று உலகத்தில் எதுவும் இல்லை எனவும், அனைத்துலக நாடுகளுக்கு கொடுக்கும் வாக்குறுதிகள் என்பது தேர்தல் காலத்தில் வழங்கும் வாக்குறுதிகள் போன்றதல்ல எனவும் சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.