இலங்கையில் இடம்பெற்றதாகக் தெரிவிக்கப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான விசாரணைகளில் அனைத்துலக நீதிபதிகள் உள்ளடக்கப்படுவது அவசியம் என்று மக்கள் கருத்தறியும் குழுவின் தலைவர் சட்டத்தரணி லால் விஜேநாயக்க தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போது இதனைத் தெரிவித்துள்ள அவர், போர்க்குற்ற விசாரணைகளை நடத்துமளவிற்கு இலங்கைக்கு போதிய அனுபவம் இல்லை என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
வெளிநாட்டு நீதிபதிகளை இலங்கையில் விசாரணை நடாத்த அனுமதிக்க முடியாது என்று இலங்கை சனாதிபதியும் பிரதமரும் உறுதியாக உள்ள போதிலும், தற்போது வழங்கப்பட்டுள்ள இரண்டுஆண்டுகால அவகாசத்திற்குள் பொறுப்புக் கூறலை உரிய முறையில் செயற்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் இலங்கை அரசாங்கம் இது தொடர்பில் தொடர்ந்தும் அலட்சியமாக செயற்படுமாக இருந்தால், பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிடும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்