கிளிநொச்சியிலும், வவுனியாவிலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முன்னெடுத்துள்ள தொடர் போராட்டங்கள், இதுவரை எந்தவித தீர்வுகளும் முன்வைக்கப்படாத நிலையில் இரண்டாவது மாதத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன.
அந்த வகையில் காணாமல் ஆக்கப்பட்டோரின் வெளிப்படுத்தலையும் விடுதலையையும் வலியுறுத்தி, கிளிநொச்சி கந்தசாமி கோவில் பகுதியில் கடந்த பெப்ரவரி மாதம் 20ஆம நாள் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று 58ஆவது நாளாகவும் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.
நல்லாட்சி அரசாங்கம் ஆட்சியமைத்து இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், தங்களது உறவுகள் தொடர்பில் இதுவரை எந்தவித பதில்களும் வழங்கப்படவிலலை என்று இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
அத்துடன் தங்களது உறவினர்களை தடுத்து வைத்துள்ள மறைமுக தடுப்பு முகாம்களை பார்வையிட அனுமதிக்கவேண்டும் எனவும், உறவினர்கள் தொடர்பில் உரிய பதிலை வழங்க வேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
இதேவேளை வவுனியாவில் இன்று 54 ஆவது நாளாக, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சுழற்சி முறையிலான தொடர் உணவுப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே முல்லைத்தீவு, மருதங்கேணி, திருகோணமலையிலும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.