மே 5ம் திகதி வரலாறு ஒன்றின் பெரும்பிறப்பு நிகழ்ந்த தினம். ஆனால் அதற்கு ஒருவருடத்துக்கு முன்னரே 1975 யூலை 27ம்திகதி அதற்கான முன்னோட்டம் ஒன்று, ஒரு பெரும் போராட்ட சக்தி ஒன்றின் பிறப்புக்கான பெரும் கட்டியம்கூறுவது போன்ற நிகழ்வாக துரையப்பாவின் அழிப்பு நிகழ்ந்தது.
1975ம் ஆண்டு யூலை 27ம்திகதி யாழ். பொன்னாலை வரதராஜப் பெருமாள் முன்றலில் மதியம் 01:05 மணிக்கு சிங்கள ஆளும் பேரினவாத கட்சியின் ஏஜென்டாக விளங்கிய துரையப்பாவை சுட்டுவீழ்த்திய அந்த இருவரும் (மொத்தம் நால்வர்) அந்த இடத்தில் ஒரு காகித மட்டை ஒன்றை வேண்டுமென்றே போட்டுவிட்டு செல்கின்றனர்.
துரையப்பா வீழ்த்தப்பட்டதை பெரும் அதிர்ச்சியுடன் கேள்விப்பட்ட சிங்கள ஆளும் படைகள், அந்த இடத்தை சூழ்ந்து ஏதாவது துப்பு கிடைக்கிறதா என தேடினர். அது கிடைத்தது..
அந்த நேரத்து புதிய சேர்ட்களினுள் இருக்கும் மட்டை அது. ஆங்கிலத்தில் துல்லியமாக மிகப்பெரிய எழுத்துகளின் நீலநிறமான பேனாவால் “ரி.என்.ரி” என்று கைகளால் எழுதப்பட்டிருந்தது.
ரிஎன்ரி என்பது சக்திகூடிய ஒரு வெடிமருந்தின் பெயராக அறியப்பட்டிருந்தது.தாக்குதல்களில் அதிகம் சேதம் விளைவிக்ககூடியது. ஆனால் அதன் இன்னொரு அர்த்தம்தான் சிங்கள பேரினவாதத்தை அதிர்ச்சியுற வைத்தது.
“புதிய தமிழ்ப் புலிகள்”..(TAMIL NEW TIGERS)
மிகமிக நீண்டகாலங்ளுக்கு முன்னரே புலிக்கொடிகள் பறந்த தமிழர்களின் படைகள் இலங்கைத்தீவின் கடல்முழுதையும் தமது கட்டுக்குள் வைத்திருந்ததையும், இந்தியபெரும் நிலப்பரப்பின் பலபகுதிகளிலும் ஆதிக்கம் செலுத்தியதையும் சிங்கள மன்னர்களும் அதற்கு அஞ்சி வாழ்ந்ததையும் வரலாறு வரலாறாக கேள்வியுற்றிருங்த சிங்களத்துக்கு இது பெரும் அதிர்ச்சியாகதான் இருந்தது.
மீண்டும் போரிடும் வலுவுடன் தமிழர்கள் எழுந்துவிட்டதற்கான முரசறைவாக இது இருந்தது. ஆயுதந்தரித்த ஒரு கட்டமைவான அமைப்பு உருவாகி விட்டது என்பதை சிங்களம் அன்று உணர்ந்து பெரிய கலக்கம் கண்டது.
அந்த அமைப்பின் தொடர்ச்சியாகவே அதன் பெயரும் மாற்றம் கண்டு 1976 மே மாதம் 5ம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பாக உருவெடுத்தது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தோற்றம் என்பது வெறுமனே ஒரு அமைப்பின் பிறப்பு மட்டுமல்ல. புதிய ஒரு சகாப்தம் ஒன்றின் வரவு அது.
காலகாலமாக தமிழர்களை அடக்கி ஆளலாம் என்ற சிங்களப் பேரினவாத பெருங்கனவு கலைவதற்கான பொழுது வரப்போவதை உணர்த்திய நாள் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிறப்புநாள்.
புரட்சிகரமான எதிர்பியக்கம் ஒன்றின் புதுவரவாக அது இருந்தது. வெறும் மேடை அரசியல்வாதிகளின் பதவிநாற்காலி அரசியலாக இருந்துவந்த தமிழர் அரசியலை பரந்துபட்ட மக்களின் ஒன்றிணைந்த அரசியலாக வளர்த்தெடுத்த உன்னதமான அமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை தேசியத்தலைவர் உருவாக்கிய நாள் தமிழர்களின் வாழ்வில் என்றுமே மிகமுக்கியமான நாளே.
தமிழ் மக்களின் வாழ்வின் ஒரு அங்கமாக, அவர்களின் தினசரி வாழ்வியலில் புதிய பாய்ச்சலை, யார்க்கும் அஞ்சாத பெரும் வீரத்தை, எதையுமே பகுத்து பார்க்கும் ஒப்பற்ற அரசியல் நோக்கை வழங்கிய ஒரு அமைப்பின் பிறப்பு நாள் அது.
தனி ஒரு மனிதனின் ஆழ்மனதில் எழுந்த தூரநோக்கும், தெளிவும் எல்வாவற்றையும்விட ஒரு இலட்சியத்துக்காக மரணத்தையும் எதிர்கொள்ளும் பெருந்துணிவும் எந்த பொழுதிலும் தளராத உறுதியுமே இந்த இயக்கத்தின் தொடக்கத்துக்கு அத்திவாரங்கள்…
“நீ ஒருவன் தனித்து வீட்டைவிட்டு வெளிக்கிட்டு போய் போராடினால் எல்லாம் மாறிவிடுமா?” என்று அவரின் தாயார் கேட்டபோது,
“நான் நாளை நான்கு பேராவோம், அதன்பிறகு நாற்பது பேராவோம்…பிறகு நானூறு… இறுதியில் முழுமக்களுமே இலட்சியத்துக்காக எழுவார்” என்ற அர்த்தத்தில் கூறிய பதில்தான் அவரது போராட்ட நகர்வாக அவர் தொடக்கிய தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் போராட்ட வழிமுறையாக இருந்தது-இருக்கிறது.
ஆம், மக்களை அணிதிரட்டும் ஒரு வழிமுறையாகவே ஆயுதப் போராட்டம் அவரால் வடிவமைக்கப்பட்டது.
அதில் தமிழீழ தேசிய தலைவரும் அவரால் ஆரம்பிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பும் முழுமையான அர்ப்பணிப்புடனும் உறுதியுடனுமே செயற்பட்டனர்.அதன் வெளிப்பாடாகவே பிரிவுகளாலும் பேதங்களாலும் சாதீய முரண்களாலும் பிரிவுற்று இருந்த தமிழ் தேசியம் தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற ஒப்பற்ற அமைப்பின் தலைமையில் ஒன்றிணைந்தனர். போராடினர்.
மானுட வரலாற்றில் ஒருபோதுமே கண்டும் கேட்டும் அறிந்திடாத எழுத்தில்கூட எவரும் எழுதியிராத அர்ப்பணிப்புகளும் ஈகங்களும் தற்கொடைகளும் நிகழ்த்தப்பட்டன.
எப்போதுமே உலகம் மாறுதல்களை நோக்கியே தினமும் மாறிவருகிறது. சமூகங்கள், அவற்றின் அமைப்புகள், அவற்றை சுற்றி இருக்கும் உலகம், அதன் பொருளாதார கட்டமைவு என்று எல்லாமே மாற்றத்துக்கு உட்பட்டுக் கொண்டே இருக்கும். யார் தடுத்தாலும்..இது மாறாது…
சமூக மாற்றங்கள் மெதுமெதுவாக நிகழும். ஆனால் ஒரு முன்னூறு வருடங்களில் ஒரு சமூகத்தில் நிகழ வேண்டிய மாற்றங்கள், நிகழ்தே ஆக வேண்டிய நம்பிக்கைகள் என்பனவற்றை ஒரு முப்பதுவருட போராட்டத்தில் நடாத்திக்காட்டிய அமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகள் ஆகும்.
முந்நூறு ஆண்டுகள் ஒரு சமூகத்தில் இயல்பாக ஏற்படும் மாற்றங்களையும் சமூக உள்கட்டமைப்புகளுக்குள் நடைபெறும் பரிணாமத்தையும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு ஒரு முப்பது ஆண்டுகளுக்குள் தமது போராட்டத்தின் மூலம் நிகழ்த்திக் காட்டியுள்ளார்கள்.
எல்லாவற்றிலும் மேலாக ஒரு தேசிய இனத்துக்கு இருந்திருக்க வேண்டிய தன்நம்பிக்கையை ஒருகட்டத்தில் உச்சத்துக்கு கொண்டுபோனவர்கள் அவர்கள்.
தேசிய இனத்தின் தன்னம்பிக்கையை கலைப்பதில் எப்போதும் ஆக்கிரமிப்பாளர்கள் மிகக்கவனமாக இருப்பார்கள்.தமது இன மக்களின் தன்னம்பிக்கையை போராட்ட அமைப்பு எப்போதும் வளர்க்கவே செயற்படும்.
இப்படியாக தன்னம்பிக்கையை அழிப்பதில் ஆக்கிரமிப்பாளனும் அதனை ஓங்கி எழச் செய்வதில் போராளிகளும் நடாத்தும் எதிர்வினைகளே விடுதலைப் போராட்டமாகிறது.
அந்த வகையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு எமது மக்கள் மத்தியில் விடுதலையின் மீதான நம்பிக்கையை படரவிட்டு அதனை மனங்களுள் இறுக்கமாக்கியவர்களாகவே தெரிகிறார்கள்.
ஆனால் சிங்களப் பேரினவாதம் இதனை அழிப்பதற்கும் இந்த அமைப்பை வேரும் வேரடி மண்ணோடும் பிடுங்கி வீசவும் எல்லா முயற்சிகளையும் இது ஆரம்பித்த நாள்முதலாக இன்றுவரை செய்தே வருகிறது.
சட்டங்களின் கடுமையையும்,சொத்துக்களை பறிக்கும் பயமுறுத்தல்களையும், நீண்டகால சிறை என்பதையும் காட்டியே இந்த இமைப்பை அழிக்கலாம் என்ற கற்பனையில் உருவானதுதான் 1978 மேமாதம் சிங்களப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட “தமிழீழ விடுதலைப் புலிகளை தடைசெய்தல்” சட்டமூலம்.
அதன்பிறகு தன்னிடம் இருந்த அனைத்து பலத்தையும் மட்டுமல்லாமல் சர்வதேச சக்திகளிடம் வாங்கி குவித்த பலங்களையும் கொண்டு தமிழர்களின் ஒரே விடுதலை அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகளை ஒழித்து கட்ட சிங்களம் முயற்சித்தது.
எப்போதும் அதிகார ஆசைக்கோ, பதவி நாற்காலிக்கோ, தலையில் சூட்டப்படும் மகுடங்கங்களுக்காகவோ தமிழீழம் என்ற இலட்சியத்தை விட்டுத்தராத ஒப்பற்ற தலைமையும் அதன் வழிநடாத்தலில் இயங்கிய போராளிகளும் சிங்களத்தின் ஒவ்வொரு முயற்சியையும் முறியடித்து தமிழீழம் என்ற இலட்சிய பதாகைகயின்கீழ் எமது மக்களை திரட்டினர். மக்களை எழுச்சியுற வைத்தனர்.
இன்று தமிழ் மக்கள் மத்தியில் அடிபணிவு கருத்துகளையும், தொழுது வாழும் அரசியலையும் புகுத்த நினைப்பவர்கள் எதிர்பார்ப்பதுபோல, ஒருபோதும் ஒருபோதுமே தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பின்பான காலம் என்று ஒன்று உருவாகாது. இன்று சிங்களத்துக்கு எதிராக எழும் தமிழ்மக்களின் எந்த எதிர்ப்பு அரசியலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டத்தின் தொடர்ச்சியாகவே விளங்கும்- எப்போதும்.
முப்பது வருடங்களாக தமிழீழ விடுதலைப் புலிகள் எவ்வாறு இந்த இனத்தை ,அதன் அடையாளங்களை, காப்பாற்றி போரானார்கள் என்பதை எழுதுவதற்கு வேறெங்கும் செல்ல வேண்டாம்.
இன்று தினமும் தமிழர்மீது சிங்களப் பேரினவாதத்தால் நடாத்தப்படும் அவமானப்படுத்தல்களும், ஏனென்று யாருமே கேட்கமுடியாமல் நிகழ்த்தப்படும் நிலஅபகரிப்புகளும், எல்லோர் மீதும் போர்த்து விடப்பட்டிருக்கும் இராணுவ முற்றுகையும், அடையாளங்களை அழிக்கும் கலாசார சீiழிவுகளும்,எதிர்ப்பு எதுமே இல்லாமல் எம்மீது காறி உமிழும் இழிவுகளுமே காட்டுகின்றன.
எமது தேசிய விடுதலை அமைப்பு முப்பது வருடங்களாக இவைகள் நடக்கவே கூடாது என்பதற்காகதான் உயிர் ஈந்து போராடினார்கள்…
தமிழீழ விடுதலைப் புலிகள் மௌனமாக பின்னகர்ந்த பின்னர் தோன்றியிருக்கும் பெருவெற்றிடம் என்பது அவர்களின் பௌதிகத் தோற்றம் கண்ணிலிருந்து மறைந்ததால் மட்டுமே உருவான ஒரு கானல்தோற்றம்தான்.
அது ஒரு மனஏக்கம் மட்டுமேதான்.
அவர்கள் எம் கண்முன்னால் இருந்து மறைந்ததால் ஒரு பெரும்வெற்றிடம் ஏற்பட்டதாக நாமே சூனியத்தை உருவாக்கி அதற்குள் சுருண்டு படுக்கத் தலைப்பட்டு விட்டோம்.
ஒரு தேசிய இனம் தனது நம்பிக்கையைத் தொலைப்பது என்பது கூட்டுத் தற்கொலைக்கு சமம். தன்னம்பிக்கையை தொலைத்த மக்களின்மீது மிக இலகுவாக ஆக்கிரமிப்பாளன் தோற்றம் மறைவு எழுதிவிடுவான்.
எனவே நாம் அனைவரும் சோர்வில் இருந்தும் சூனியத்தில் இருந்தும் முதலில் வெளிவர வேண்டும். வாழ்வின் இறுதிக்கணம் தெரிந்து கொண்டே உறுதியுடன் போய் வெடித்த இளைய மனிதர்களை நினைவில் கொண்டால் பெருவெளிச்சம் மனமெங்கும் உருகிவழியும்.
அந்த இறுதிக் கண உறுதியை நெஞ்சமெங்கும் உள்வாங்கி பயணம் செய்வதுதான் தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற மகத்தான விடுதலை அமைப்புக்கு நாம் செய்யும் கைமாறு ஆகும்.
– ச.ச.முத்து-