இலங்கையின் தென்பகுதியில் நேற்று அதிகாலையிலிருந்து 24 மணித்தியால காலப்பகுதியில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தினால் நூற்றுக்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 100 பேர் வரையில் காணாமல் போயுள்ளதாகவும், சுமார் 230 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கொளுத்தி எடுத்த வெயிலின் பின்னர் இலங்கையின் தென்பகுதியில் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக காட்டாறாக வெள்ளம் எல்லா இடங்களிலும் பெருகி ஓடுவதுடன், பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.
வெள்ளம் மற்றும் மண் சரிவில் சிக்கி 102 பேர் உயிரிழந்துள்ளதுடன், 110 பேர் காணாமற் போயுள்ளனர் என்றும், 53 ஆயிரம் பேர் வரையில் கடும் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளனர் என்றும் இடர்முகாமைத்துவ மைய நிலையம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
கன மழையால் 8 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், துரித கதியில் மீட்பு நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளதுடன், முப்படையினர், காவல்த்துறையினர், அரச அதிகாரிகள் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர்.
மழை தொடர்வதனால் நீர்த் தேக்கங்கள் பலவற்றில் தண்ணீர் திறந்து விடப்படுவதாகவும், கிராமங்கள் நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கி வருவதாகவும், ஆறுகளின் நீர்மட்டம் சடுதியாக அதிகரித்துச் செல்வதனால், அவற்றின் அருகில் வசிப்பவர்களை வெளியேறுமாறு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தென்பகுதி மாவட்டங்களான மாத்தறை, காலி, களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி, அம்பாந்தோட்டை, கம்பகா மற்றும் கொழும்பில் நேற்றுமுன்நாள் இரவிலிருந்து தொடர்ச்சியாக மழை பெய்வதனால், நீர்த் தேக்கங்களின் நீர் மட்டம் அதிகரித்து வரும் நிலையில், நிலமையைக் கட்டுப்படுத்த அவற்றின் வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.
களு, களணி, ஜின், நில்வல ஆகிய ஆறுகளின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதுடன், தொடர் மழையினால் ஏற்பட்ட வெள்ளம், ஆறுகளின் நீர் மட்ட அதிகரிப்பு என்பனவற்றுக்கு மத்தியில் மண் சரிவும் ஏற்பட்டுள்ளது.
இந்த இயற்கைச் சீற்றத்தினால், நேற்றுக் காலையிலிருந்தே பல பிரதேசங்களில் சாவு ஓலம் கேட்கத் தொடங்கியதுடன், புதையுண்டவர்களைக் கூட மீட்க முடியாதளவிற்கு மழை தொடர்ந்து கொண்டிருந்தது.
இதேவேளை இராணுவத்தினர் 800 பேரும் வான் படையின் 7 உலங்கு வானூர்திகளும் உதவிப் பணிகளுக்காகக் களத்தில் இறக்கப்பட்டுள்ள போதிலும், விட்டுக் கொடுக்காது மழையும் தொடர்ந்து கொட்டித் தீர்ப்பதனால் மீட்பு மற்றும் உதவி வழங்கலில் பெரும் சிரமங்களை எதிர்கொள்ள நேரிடுவதாக பாதுகாப்புத் தரப்பினர் கூறியுள்ளனர்.
சீறிப் பாய்ந்து செல்லும் வெள்ளம் மற்றும் ஆற்று நீரோட்டத்தின் காரணமாக பல முதன்மைச் சாலைகள் மூடப்பட்டுள்ளதுடன், பல பிரதேசங்களுக்கான வீதிப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
லக்சபான நீர்த் தேக்கத்தின் இரண்டு வான் கதவுகளும் மஸ்கெலிய கெனியோன் நீர்த் தேக்கத்தின் இரண்டு வான் கதவுகளும் திறந்து விடப்பட்டுள்ளதனால், களனி கங்கையின் நீர் மட்டம் அதிகரித்துள்ளது.
கொழும்பில் களனி கங்கையை அண்மித்த கொலன்னாவை, சீதாவக, கடுவெல மற்றும் ஹோமாகம மற்றும் கம்பகா மாவட்டத்தின் களனி, வத்தளை மற்றும் பியகம ஆகிய பிரதேசங்களிலிருந்து சுமார் 2,000 குடும்பங்கள் வரை வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மண்சரிவினால் களுத்துறை, காலி, கேகாலை, இரத்தினபுரி மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மண்சரிவில் சிக்குண்டு – புதையுண்டு போனவர்களில் 91 பேர் வரையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
காணாமல் போனவர்களை தேடும் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகிற்ன நிலையில், இன்றைய நாள் சற்று மழை குறைந்தாலும், சீரற்ற காலநிலை நிலைமைகள் தொடர்ந்தும் நீடிக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.