முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை தமிழகத்தில் நடாத்த முற்பட்டதால் குண்டர் சட்டத்தின் கீழ் திருமுருகன் காந்தி உட்பட சிலர் கைதுசெய்யப்பட்டமையை வன்மையாக கண்டிப்பதாக, தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனைத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இதனைக் கண்டித்து பாரிய கண்டன போராட்டமொன்றை நடாத்தவுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.
கடந்த மே மாதம் 21ம் நாள் தமிழ் நாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை நடாத்துவதற்கு திருமுருகன் காந்தி உட்பட மே 17 அமைப்பை சார்ந்தவர்களும் பொது மக்களும் தீர்மானித்திருந்தனர்.
இதற்கு தமிழக அரசு தடை விதித்திருந்த நிலையில் அதனையும் மீறி நினைவேந்தலை நடாத்தியமையாலேயே திருமுருகன் காந்தி உட்பட, தமிழர் விடியல் கட்சியின் தலைவர் செயற்பாட்டாளர்கள் இருவர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு இவர்கள் கைதுசெய்யப்பட்டமையை தமிழ் தேசிய மக்கள் முன்னணியானது வன்மையாக கண்டிப்பதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் திருமுருகன் காந்தி உட்பட்ட ஏனையவர்கள் கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் எட்டாம் நாள் யாழ்ப்பாணத்தில் பாரிய கண்டன கவனயீர்ப்பு போராட்டத்தை நடாத்தவுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
அத்துடன் இந்தக் கவனயீர்ப்பு போராட்டத்தை யாழ். இந்திய தூதுரகத்திற்கு முன்பு அல்லது யாழ். மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பு நடாத்துவதற்கு ஆலோசித்துவரும் நிலையில் அது தொடர்பாக பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.