கனடா எவ்வளவுக்கு விலைமதிப்பற்ற ஒரு நாடு என்பதனையும், இங்கு வாழ்வது எவ்வளவு விலைமதிப்பற்றது என்பதையும் இங்கு வாழும் எவரும் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது என்று ரொரன்ரோ நகரபிதா ஜோன் ரொறி தெரிவித்துள்ளார்.
கனடா நாளை முன்னிட்டு தனது டுவிட்டர் மூலம் வெளியிட்டுள்ள சிறப்பு காணெடிளி அறிக்கை ஒன்றிலேயே இதனைத் தெரிவித்துள்ள அவர், இந்த சிறந்த நாட்டில் வாழ்வதற்கு நாம் அனைவரும் எவ்வளவு அதிஸ்டம் செய்திருக்க வேண்டும் எனவும், உலகிலேயே மிகவும் சிறந்த நாடு ஒன்றில், அதன் சிறந்த நகரம் ஒன்றில் நாம் அனைவரும் வாழ்ந்து வருவதாகவும் பெருமிதம் வெளியிட்டுள்ளார்.
கனடா அனைத்து நற்பண்புகளையும் உள்ளடக்கியுள்ளது என்ற முழுமையான இலக்கினை எட்டுவதற்கு இன்னும் சில காரியங்களை ஆற்ற வேண்டிய தேவை உள்ளது எனவும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
இருந்த போதிலும், கனடாவின் அடிப்படை நியமங்கள் கனேடியர்கள் அனைவரையும் ஒன்றுபடுத்தி வைத்துள்ளதாகவும், அதன்மூலும் மிகவும் அதிக வாய்ப்புகளை கொண்ட ஒரு நாடாக கனடா திகழ்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த வகையில் எமது அடிப்படை நியமங்களான மன்னிக்கும் குணம், சமத்துவம், அனைவரையும் மதிக்கும் தன்மை, நியாயாதிக்கம் போன்றவற்றை நாம் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது எனவும் ரொரன்ரோ நகரபிதா ஜோன் ரொறி மேலும் தெரிவித்துள்ளார்.