இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிஷப், இலங்கையின் நீண்டகால பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கு அடிப்படையான நல்லிணக்க செயற்பாட்டின் முன்னேற்றம் குறித்து அரசாங்கத்துடன் கலந்துரையாடவுள்ளார். அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சு இன்று (திங்கட்கிழமை) விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விஜயத்தின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் விசேட சந்திப்பில் ஈடுபடவுள்ள ஆஸி. அமைச்சர், இலங்கையில் தேசிய பிரச்சினையாக உருவெடுத்துள்ள டெங்குக் காய்ச்சலை தடுக்க தமது நாட்டு அரசாங்கத்தின் உதவியை அறிவிக்கவுள்ளதாகவும் அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இந்தியா மற்றும் இலங்கைக்கான தமது விஜயத்தை நாளைய தினம் ஆரம்பிக்கவுள்ள ஆஸி. அமைச்சர், இவ்வார இறுதியில் இலங்கையை வந்தடைவார். இவ்விஜயத்தின் போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகியோரையும் அமைச்சர் ஜூலி பிஷப் சந்திக்கவுள்ளதோடு, பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக மேம்பாடு குறித்தும் இதன்போது கலந்துரையாடவுள்ளார்.





