மனித உடலுக்கு பயிறு வகைகள், அதிக பலம் அளிக்கின்றன. பயறு வகைகளில் பாசிப்பயறு, நரிப் பயறு, காராமணி, தட்டைப் பயறு, பயற்றங்காய், மொச்சைப் பயறு போன்றவை சத்தானதாகும். பாசிப்பயறுக்கு, பயத்தம் பருப்பு, பாசிப்பருப்பு என்ற பெயர்களும் மக்களிடம் பேச்சு வழக்கில் உள்ளன.
நன்கு முதிர்ந்த பயறு வகைகளில்தான் அதிகச் சத்துக்களும், குறைவான ஈரப்பதமும் காணப்படுகின்றன. புன்செய் நிலங்களில் விளையக் கூடிய தானியங்களில் சிறந்த உணவுச் சத்து கொண்டது பயறு என்றால், அது மிகையல்ல. முதிராத காய்களில் புரதம் குறைவாகவும், வைட்டமின், மாவுச்சத்து ஆகியவை அதிகமாகவும் காணப்படும். ஆனால் முதிர்ந்த பயறு வகைகளில் 20 சதவிகிதம் புரதச்சத்தும் 60 சதவிகிதம் கார்போஹைட்ரேட் என்னும் மாவுச்சத்தும் காணப்படுகின்றன. அதிலும் சோயா பயற்றில் 48 சதவிகிதம் புரதமும், 30 சதவிகிதம் மாவுச்சத்தும் காணப்படுகின்றன. இது பயறு வகைகளிலேயே அதிகமாகும்.
பயறுகளும், தானியங்களும், பல மருத்துவக் குணங்களையும் கொண்டவை. பயறு வகைகளில் அமினோ புளிமங்களும் குறிப்பாக “லைசின்” மிக அதிக அளவுகளில் காணப்படுகின்றன. ஆனால், தானியங்களில் “லைசின்”குறைவாகவே இடம் பெற்றிருக்கின்றது. பயறு வகைகளில் அதிகமாக “வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ்” “ரிபோபிளேவின்” அதிகம் அடங்கியுள்ளது.
பச்சைப் பயறு மற்றும் தட்டைப்பயற்றில் புரதச்சத்துக்கள் மிகுந்து காணப்படுகின்றன. அதை அப்படியே பயன்படுத்துவதைவிட, முளைக்கட்டி பயன்படுத்துவதன் மூலம் நல்ல பயன் கிடைக்கும். முளைக்கட்டிய பயற்றில் வாயுத்தன்மையை உண்டு செய்யும் தன்மை கிடையாது. எளிதில் செரிமானமும் ஆகும். பயறுகள் முளைவிடும் தறுவாயில் “அஸ்கார்பிக்” அமிலமான “வைட்டமின்-சி” அதிகம் காணப்படுகின்றது.
முளைக்கட்டிய பயறுகளில் பிற வைட்டமின்களும் கூடுதலாகக் காணப்படுகின்றன. இவை முளை வளர வளரக் கூடிக்கொண்டே போகிறது. முளைக்கட்டிய பயிற்றை அப்படியே பச்சையாகவே சாப்பிடலாம். பச்சை வாசனை பிடிக்காதவர்கள், ஆவியில் 5 நிமிடம் வேக வைத்து பின்னர், வெல்லம் அல்லது சர்க்கரை சேர்த்தும் சாப்பிடலாம். வெந்த பயிற்றைக் கூட்டு, பொரியல் ஆகியவற்றிலும் சேர்த்து உண்ணலாம்.
பயற்றம் பருப்பை வேக வைத்த தண்ணீரை உப்பும், காரமும் சேர்த்து, நோயுற்றபின் மெலிந்து பலக்குறையுள்ளவர்கள் தொடர்ந்து சில வாரங்கள் சாப்பிட்டால், களைப்பு நீங்கி, உடல் பலம் பெறும். குறிப்பாக வளரும் குழந்தைகளுக்கு பயிற்றால் செய்யப்படும் உணவு வகைகள், அபரீதமான பலத்தை கொடுக்கும் என்பது மாறாத உண்மை!!!.