புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை எப்படி வரைய வேண்டும் என்ற ஐ.நாவின் வழிகாட்டுமுறைகளை சிறிலங்கா அரசாங்கம் ஏற்றுக் கொள்ளாது என்று சிறிலங்காவின் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் தற்போதைய பயங்கரவாத தடைச்சட்டத்தை மோசமாக விமர்சித்திருந்தார்.
அத்துடன், பயங்கரவாத எதிர்ப்பின் போது, மனித உரிமைகள் மற்றும் அடிப்படைச் சுதந்திரங்கள் ஊக்குவிக்கப்படவும் பாதுகாக்கப்படவும் வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க முன்னர், சிறிலங்கா அரசாங்கம் ஆக்கபூர்வமான கலந்துரையாடல் செயல்முறைகளில் ஈடுபட வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்காவின் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச,
“புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை எப்படி வரைய வேண்டும் என்ற ஐ.நாவின் வழிகாட்டுமுறைகளை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளாது.
அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமே கொண்டு வரப்படும்.
சட்டங்கள் இங்குதான் உருவாக்கப்பட வேண்டும். அவற்றை எமது நாடாளுமன்றம் தான் அங்கீகரிக்க வேண்டும்.
இந்த சட்டங்கள் எமக்கானவை. ஏனையவர்களுக்காக நாம் அதனை செய்ய முடியாது.” என்று தெரிவித்துள்ளார்.