வடமாகாண ஆளுநர் நிதியத்திடம் இருந்த 144 மில்லியன் ரூபா நிதியை, வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் பெறுப்பேற்க வேண்டும் என, வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண சபை கடந்த மூன்று வருடங்கள் 9 மாத கால பகுதியில் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பிலான மீளாய்வு செய்வதற்கான விசேட அமர்வு இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது.இதன் போதே அவைத்தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ”வடக்கு மாகாண ஆளுநர் நிதிய வைப்பில் இருந்த 144 மில்லியன் ரூபாய் பணத்தை மாகாண சபை பெற்று போரினால் பாதிக்கப்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்கள், பெற்றோரை இழந்த பிள்ளைகள், பிள்ளைகளை இழந்த பெற்றோர்கள் ஆகியோருக்கு உதவும் வகையிலான செயற்றிட்டங்களை முன்னெடுப்பது என தீர்மானிக்கப்பட்டது.
இந்தப் பணத்தை மாகாண சபை பெற்று ஒரு வருடம் கடந்த நிலையிலும், இதுவரை அந்த பணத்தில் ஒரு சதம் கூடச் செலவு செய்யப்படாது வடக்கு மாகாண பிரதம செயலாளரின் கணக்கில், வங்கியில் வைப்பிலிடப்பட்டு இருக்கிறது.
தற்போது மகளிர் விவகார அமைச்சராக அனந்தி சசிதரன் பொறுப்பேற்றுள்ளார். அவராவது இந்தப் பணத்தைப் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் செயற்றிட்டங்களை முன்னெடுக்க வேண்டும்” என அவைத்தலைவர் கோரினார்.