புகழ் பூத்த மறைந்த இளவரசி டயானாவின் ஆவணப்படம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிடப்படவுள்ளது. இதனை அவரது மகன்களான வில்லியம் மற்றும் ஹரி ஆகியோர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
சாதரண குடும்பத்தில் பிறந்து அனைவரிடமும் சரிசமமாக பழகி வந்த டயானா, தற்போதும் உலக மக்களின் மத்தியில் நீங்காத இடத்தை பெற்றுள்ளார். இவர் துரதிஷ்டவசமாக கடந்த 1997ஆம் ஆண்டு பரிசில் நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார்.
இந்நிலையில், இளவரசி டயானா விபத்தில் இறந்து 20வது ஆண்டு நினைவு தினம் அடுத்த மாதம் வரவுள்ள நிலையில், இதற்கு முன்னோட்டமாக இளவரசி டயானா தொடர்பான ஆவணப்படமொன்றை வெளியிட அவரது மகன்கள் தீர்மானித்துள்ளனர்.
இதுகுறித்து ஆவணப்படத்தின் தயாரிப்பாளர் நிக் கெண்ட் கூறுகையில், ‘டயானா எங்கள் தாயார்: அவரது வாழ்வும் மரபும்’ என்ற தலைப்பில் ஆவணப்படம் எடுக்கப்பட்டுள்ளது. டயானா விபத்தில் உயிரிழக்கும் முன்னர் அவர்கள் பேசிய தொலைபேசி உரையாடல்கள் உட்பட பலவற்றை இந்த படம் பதிவு செய்துள்ளது. இதன் மூலம் நீங்கள் டயானாவின் தனிப்பட்ட குணாதிசயங்களை அறிந்துகொள்ள முடியும்.
டயானா நகைச்சுவை உணர்வு நிரம்ப பெற்றவர். அவரது வாழ்க்கையை அவரது மகன்களை தவிர வேறு யாரும் சரியாக சொல்லிவிட முடியாது. ஹெச்.ஐ.வி. நோயினால் பாதிப்பு அடைந்தவர்களுக்கு உதவுதல் உள்ளிட்ட செயல்களால் சர்ச்சையில் சிக்கியது உள்பட பல்வேறு விடயங்கள் குறித்து இதில் விளக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தை தனது மகன்களுக்கு போட்டு காண்பித்த இளவரசர்கள் பிரின்ஸ் மற்றும் ஹரி ஆகியோர், ‘இவர்தான் உங்கள் பாட்டி’ எனக்கூறி பெருமைப்பட்டுள்ளனர். பிரித்தானிய மற்றும் அமெரிக்க தொலைக்காட்சிகளில் டயானா குறித்த ஆவணப்படம் நாளை முதல் ஒளிபரப்பாக உள்ளது” என கூறினார்.