சிறிலங்காவில் பொறுப்புக்கூறல் இடம்பெற வேண்டும் என்று கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடே வலியுறுத்தியுள்ளார். கறுப்பு ஜூலை நினைவுகூரலை முன்னிட்டு வெளியிட்டுள்ள செய்தியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
“1983ஆம் ஆண்டு ஜூலை 24ஆம் நாளுக்கும் 29ஆம் நாளுக்கும் இடையில் கொழும்பிலும் சிறிலங்காவின் ஏனைய பகுதிகளிலும் திட்டமிட்ட அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தமிழர்களுக்கு எதிரான படுகொலைகளினால், ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டும், நாடிழந்தவர்களாக இடம்பெயரவும் நேரிட்டது.
இன்று கறுப்பு ஜூலையின் 34 ஆவது ஆண்டை நினைவு கூரும் தமிழ்ச் சமூகத்தினர் மற்றும் கனடிய தமிழர்களுடன் நாமும் இணைந்து கொள்கிறோம்.
சிறிலங்கா உள்நாட்டுப் போரின் இருண்ட நாட்களை பிரதிபலிக்கும் அதேவேளை, பாதிக்கப்பட்ட அனைவரினதும் காயங்களைக் குணப்படுத்துவதற்கும் நாம் தொடர்ந்து பணியாற்ற வேண்டும்.
அனைத்து இலங்கையர்களுக்கும் நீண்டகால நல்லிணக்கம் மற்றும் அமைதியை எட்டுவதற்கான அனைத்துலக முயற்சிகளை கனடா வரவேற்கிறது.
போரினால் பாதிக்கப்பட்டவர்களின் நம்பிக்கையைப் பெற்ற ஒரு பொறுப்புக்கூறும் செயல்முறை உருவாக்கப்பட வேண்டும்.
சிறிலங்கா உள்நாட்டுப் போரினால் மிகுந்த இழப்புக்களைச் சந்தித்தவர்களுக்கு கனடிய அரசாங்கத்தின் சார்பில் எனது ஆழந்த அனுதாபத்தையும், ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.