ஒபாமா காப்பீட்டு திட்டத்தை மாற்றியமைக்கும் புதிய சட்டமூலத்திற்கு அமெரிக்க செனட்சபை மறுப்பு தெரிவித்துள்ளது.
ஒபாமாவின் சுகாதார காப்பீட்டு திட்டத்தை மாற்றியமைத்து அதற்கு பதிலாக டொனால்ட் ட்ரம்பினால் புதிய சுகாதார திட்டத்தை அமுல்படுத்துவதற்கான சட்டமூலம் தொடர்பில் செனட் சபையில் நேற்று (வியாழக்கிழமை) இரவு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இந்த வாக்கெடுப்பின் போது, குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் பலரும் எதிராக வாக்களித்திருந்த நிலையில் குறித்த சட்டமூலம் தோல்வியடைந்துள்ளது. குறிப்பாக லின்ஸி கிரகாம், ரொன் ஜோன்சன் மற்றும் ஜோன் மக்கெயன் ஆகியோர் சட்டமூலத்திற்கு எதிராக வாக்களித்தனர். 100 பேரைக் கொண்ட செனட்சபையில் மேற்படி சட்டமூலத்திற்கு ஆதரவாக 49 பேரும் எதிராக 51 பேரும் வாக்களித்திருந்தனர்.
நடப்பாண்டின் ஆரம்பத்தில் அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்ட டொனால்ட் ட்ரம்ப், முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவின் சுகாதார காப்பீட்டு திட்டத்தை மாற்றியமைக்கவுள்ளதாக தெரிவித்திருந்தார்.அதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளார். எனினும் ட்ரம்பின் முயற்சிகளுக்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்பு கிளம்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.