வடக்கு கிழக்கில் சமஸ்டி முறையிலான தீர்வினை தற்போதய அரசாங்கம் தர மறுக்குமானால், நாங்கள் பிரிந்து சென்று வாழும் சந்தர்ப்பத்தினை தருமாறு அனைத்துலகத்திடம் நாங்கள் கேட்கும் நிலையேற்படும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை மட்டக்களப்பு அமெரிக்க மிசனில் நடைபெற்ற வெலிக்கடை சிறைப்படுகொலை மற்றும் கறுப்பு யூலை நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கையில் அகிம்சை போராட்டம் தேவையற்றது. அது புதைக்கப்பட வேண்டும் என்றபோது தான் தங்கத்துரை, குட்டிமணி போன்றவர்கள் ஆயுதம் மூலமே இவற்றினை வெல்லமுடியும் என்று நினைத்த காரணத்தினால் ஆயுதப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது எனவும், இன்று இந்த ஆயுதப்போராட்டத்தினை பலர் கொச்சைப்படுத்துகின்ற போதிலும், இந்த ஆயுதப்போராட்டம் மூலமே இலங்கையில் உள்ள இனப்பிரச்சினை அனைத்துலகத்திற்கு தெளிவாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிழக்கு மாகாண இளைஞர்களின் வீரம் என்பது ஆயுதப்போராட்டத்தில் மறக்க முடியாத இடத்தினைக் கொண்டுள்ளது எனவும், அதேபோன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் உருவாக்கத்திற்கு அடித்தளமிட்டதும் இந்த மட்டக்களப்பு மாநகரம் எனவும் தெரிவித்துளள அவர், கிழக்கு மாகாணம் ஈழப்போராட்டத்தில் தனது பங்களிப்பினை பெரியளவில் செய்துள்ள நிலையில், வடக்கு கிழக்கில் தனது இனத்திற்காக இரத்தம் சிந்திய இளைஞர்களின் வீரம் இன்று கொச்சைப்படுத்தப்படுகின்றது எனவும் கூறியுள்ளார்.
நாட்டில் இருந்த மகிந்த ராஜபக்ஸவின் ஆட்சியை இல்லாமல் செய்வதற்கு அனைத்துலகமும் தமிழ் மக்களும் முக்கிய காரணமாக அமைந்தன எனவும்,சிறுபான்மை மக்களினால் எந்த மாற்றத்தினையும் ஏற்படுத்த முடியாது என்று கருதிய தென்னிலங்கைக்கு, சனாதிபதி தேர்தல் மூலம் மாற்றத்தினை ஏற்படுத்திக்காட்டியவர்கள் இந்த தமிழ் பேசும் மக்களே எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இன்று வடக்கு கிழக்கு மாகாணசபைகளுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டு, நிறைவேற்று அதிகார முறைமை இல்லாமல் செய்யப்படும் எனவும், இவற்றுக்கு ஆதரவு வழங்குமாறும் அனைத்துலகம் கேட்கும் நிலையில், நாங்கள் துரிதமாக அனைத்தையும் தட்டிக்கழித்து, இலங்கை அரசாங்கத்திற்கு சந்தர்ப்பத்தினை வழங்கக்கூடாது என்பதற்காகவே, சில விட்டுக்கொடுப்புகளை தமிழ்தேசிய கூட்டமைப்பு செய்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இணைந்த வடக்கு கிழக்கில் சமஸ்டி முறையிலான தீர்வினை இந்த அரசாங்கம் தர மறுக்குமானால், நாங்கள் பிரிந்துவாழும் சந்தர்ப்பத்தினை தரவேண்டும் என்று அனைத்துலகத்திடம் கேட்கும் நிலையேற்படும் எனவம் அவர் எச்சரித்துள்ளார்.
இலங்கையில் இனப்பிரச்சினை தீர்க்கப்படவேண்டும் என்பதனை ஓங்கியொலிக்க செய்தது ஆயுதப்போராட்டமே என்பதையும், அனைத்துலகத்திடம் எமக்கான நியாயமான தீர்வு வழங்கப்பட வேண்டும் என்று கேட்கவைத்ததும் இந்த ஆயுதப் போராட்டமே என்பதையும், ஐ.நாவுக்கு எமது பிரச்சினையை கொண்டு சென்றதும் இந்த ஆயுதப்போராட்டமே என்பதையும், ஆயுதப் போராட்டத்தினை விமர்சிப்பவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ் மக்களுக்காக ஆயுதம் தூக்கி போராடிய நாம், அந்த போராட்டம் மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர்களை இழந்துள்ள நிலையில், சலுகைகளுக்காக ஒருபோதும் அடிபணிய முடியாது எனவும், புனித விடுதலையென்ற வார்த்தை அன்று ஒவ்வொறு இளைஞர் யுவதியிடமும் இருந்த நிலையில், இன்று அதனை வெளியில் கூற பலர் தயங்குகின்றனர் எனவும் செல்வம் அடைக்கலநாதன் மேலும் தெரிவித்துள்ளார்.