அரசியல் ரீதியான கருத்துக்களை வெளிப்படுத்த வேண்டாம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் என்ற முறையில் உங்களை எச்சரிக்கின்றேன் என தமிழரசுக்கட்சியின் சாவகச்சேரி தொகுதிக்கிளை தலைவரும் ஓய்வுநிலை அதிபருமான க.அருந்தவபாலனுக்கு பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கை தட்டுவதற்கு ஆட்களை இங்கு கூட்டிக்கொண்டுவரவேண்டாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வருடத்திற்கு பின் தென்மராட்சி பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை (1) பிற்பகல் 2.00 தென்மராட்சி கலைமன்ற மண்டபத்தில் இணைத்தலைவர்களான இராஜாங்க அமைச்சர் திருமதி வியஜகலா மகேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், அங்கஜன் இராமநாதன் மற்றும் பிரதேச செயலர் தேவநந்தினி பாபு ஆகியோர் தலைமையில் இடம்பெற்றது.
தென்மராட்சிப் பிரதேசத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பாக திணைக்களங்கள் சார்ந்து கலந்துரையாடப்பட்டது.
இதன்போது சாவகச்சேரி பிரதேச சபைக்குட்பட்ட கொடிகாமம் பொதுச்சந்தை மற்றும் வீதிகள் புனரமைப்பு போன்றன பிரதேச சபைக்கு போதாமையால் மேற்கொள்ளபடுவதில்லை என சுட்டிக்காட்டப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவித்த பா.உ சுமந்திரன் பிரதேச சபையினை இரண்டாக பிரித்து அதன்மூலம் அபிவிருத்திக்கான நிதியினை பெற்று வேலைத்திட்டங்களை முன்னெடுக்கலாம் என தெரிவித்தார்.
பிரதேச சபையினை இரண்டாக பிரிக்கின்ற போது பிரதேச செயலகம் இரண்டாக பிரிப்பதும் இலகுவாக அமையும் என தெரிவித்தார். இந்தநேரத்தில் கடந்த வருட ஆரம்பத்தில் இடம்பெற்ற ஒருங்கிணைப்புக்குழு தீர்மானத்தின்படி பிரதேச செயலகத்தை இரண்டாக பிரிப்பதற்கான விண்ணப்பம் செய்யப்பட்ட போதும் அதற்கான பதில் இன்னும் கிடைக்கவில்லை. இதனை இங்கே இருக்கின்ற அமைச்சர், அரச தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அரசாங்கத்தோடு மிக நெருக்கமான உறவைப் பேணுகின்ற பாரளுமன்ற உறுப்பினர் ஆகியோர் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அருந்தவபாலன் தெரிவித்ததோடு பொதுமக்கள் சார்பான நியாயமான கருத்துக்களை தொடர்ந்து முன்வைத்தார்.
அருந்தவபாலனின் கருத்துக்கு அரச உத்தியோகத்தர்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என மண்டபத்தில் இருந்த அனைவரும் கைதட்டி வரவேற்றனர்.
அதை அடுத்து பா.உ சுமந்திரன் அருந்தவபாலனை நோக்கி கைதட்டுவதற்கு ஆட்களை கூட்டிக்கொண்டு வந்து இருத்திவிட்டு அரசியல் ரீதியாக கதைக்கவேண்டாம் உங்களை இணைத்தலைவர் என்ற வகையில் இனிமேல் இவ்வாறு பேசவேண்டாம் நான் உங்களை எச்சரிக்கின்றேன் என தெரிவித்தார்.
அருந்தவபாலனை பேச விடாது சுமந்திரன் எச்சரிக்கை விடுத்த போது சபையில் சலசலப்பு ஏற்பட்டது. இதன்போது கூட்டத்தை நடத்துகின்ற தலைவர் இவ்வாறு சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாது என அருந்தவபாலன் தெரிவித்த போது நான் இவ்வாறுதான் பேசுவேன் நான் இணைத்தலைவர் என சுமந்திரன் பதிலளித்தார்.
இதன்பின் கூட்டம் வழமைபோல் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது இணைத்தலைவரான பா.உ சுமந்திரன் இடைநடுவில் வெளியேறிச் சென்றார். இதையடுத்து அவருக்குப்பின் இணைத்தலைவரான இராஜாங்க அமைச்சர் வியஜகலாவும் வெளியேறினார். எனினும் இன்னொரு இணைத்தலைவரான பா.உ அங்கஜன் தலைமையில் தொடர்ந்து 6 மணிவரை கூட்டம் இடம்பெற்றது.
இதில் மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் மாகாண சபை உறுப்பினர்களான கே.சயந்தன், எம்.கே.சிவாஜிலிங்கம் உட்பட திணைக்களங்களின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.