மட்டக்களப்பு – நாவலடி இராணுவ முகாம் அமைந்துள்ள காணியை மீளப் பெற்றுத் தரக் கோரி கொழும்பு பிரதான வீதி நாவலடி இராணுவ முகாம் முன்பாக நேற்று பிற்பகல் சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டத்தை, பொதுமக்கள் ஆரம்பித்துள்ளனர்.
1968ம் ஆண்டு தொடக்கம் குறித்த காணியில் குடியிருந்து பின்னர் 1990ம் ஆண்டு ஏற்பட்ட யுத்தத்தின் காரணமாக இடம்பெயர்ந்து வாழ்ந்த மக்கள் தற்போது நல்லாட்சி அரசின் மூலம் இராணுவ பிடியிலுள்ள காணிகள் விடுவிக்கப்படும் நிலையில் தங்களுடைய காணிகளையும் பெற்றுத் தருமாறு கோரி காணி உரிமையாளர்கள் எட்டு பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நல்லாட்சி அரசே அதிகளாக்கப்பட்ட எமக்கு நாம் இழந்த காணியை வழங்கு, 8 ஏக்கர் காணியில் 4 ஏக்கர் காணி இராணு முகாமிக்கு எடுத்து மிகுதி 4 ஏக்கர் காணியை எமக்கு வழங்கு, இராணுவ கட்டளையிடும் அதிகாரியினால் விடுக்கப்பட்ட காணியை எமக்கு வழங்கு போன்ற வாசகங்களுடனான பதாதைகளுடன் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 2ம், 3ம் திகதிகளின் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது அரசியல்வாதிகளின் வாக்குறுதிக்கமைய போராட்டத்தை கைவிட்டதாகவும், குறித்த அரசியல்வாதிகள் இவ்விடயம் தொடர்பில் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் மக்கள் கவலை தெரிவித்தனர்.