வடக்கில் செயற்படும் ஆவா குழுவினருக்கு வெளிநாட்டுத் தொடர்புகள் உள்ளதா என்பதைக் கண்டறியும் விசாரணைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
“உள்நாடு மற்றும் வெளிநாட்டில் இருந்து ஆவா குழுவுக்கு நிதியளிக்கும் அல்லது அவர்களை இயக்கும் நபர்கள் , குழுக்களைக் கண்டறிவதற்கான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
விடுதலைப் புலிகளுடன் சந்தேக நபர்கள் கடந்த காலங்களில் தொடர்பு வைத்திருந்தார்களா என்றும் புலனாய்வு அமைப்புகள் ஆராயவுள்ளன.
இந்தச் சம்பவங்கள் தொடர்பான பயங்கரவாத புலனாய்வு பிரிவும் தனியான விசாரணைகளை நடத்தி வருகிறது.
இதுபோன்ற குழுக்கள் நாட்டில் செயற்படுவதற்கு காவல்துறை இடமளிக்காது.
பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் இந்தவாரம் மேற்கொள்ளப்பட்ட கைதுகளை அடுத்து, மூன்று வாள்கள், ஒரு கத்தி, ஒரு உந்துருளி, மற்றும் ஒரு வெளிநாட்டுத் தயாரிப்பு கைக்குண்டு என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
எனினும் சுடுகலன்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை.” என்றும் அவர் கூறியுள்ளார்.