இந்த கோடை காலத்தில் மட்டும் நியூ பிரவுன்ஸ்விக் எல்லைச் சாவடி ஊடாக கனடாவுக்குள் பிரவேசித்த அமெரிக்கர்கள் துப்பாக்கிகளை எடுத்துவந்த ஆறு குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளதாக நியூ பிரவுன்ஸ்விக்கில் பல ஆண்டுகளாக இவ்வாறான வழக்குகளைக் கையாண்டுவரும் மத்திய அரசின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அண்மையில் துப்பாக்கிகளை எடுத்து வந்த ஃபுளோரிடாவைச் சேர்ந்த ஐந்து பேருக்கும், நியூ இங்கிலண்டைச் சேர்ந்த இருவருக்கும் 2,000 டொலர்கள் வரையிலான அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும், இவ்வாறு கைது செய்யப்படுவோரில் பலரும் மரியாதைக்குரிய, சட்டம் ஒழுங்கை மதித்து நடக்கும் அமெரிக்க குடிமக்கள் எனவும், கனடாவுக்குள் கைத்துப்பாக்கிகளை எடுத்துச் செல்வது தடை செய்யப்பட்டுள்ளது என்பதனை அறிந்திராமையே அவர்கள் இவ்வாறு சிக்கிக்கொள்வதற்கு காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் தென் பிராந்தியங்களில் இருந்து வரும் 60 வயதுக்கும் அதிகமானவர்களே இவ்வாறான விவகாரங்களில் அதிகம் சிக்கிக் கொள்வதாகவும், தம்மிடம் இருக்கும் கைத்துப்பாக்கிகளை அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி, அவற்றைப் பத்திரப்படுத்திவிட்டு கனடாவுக்குள் நுளைய முடியும் என்பதும் பலருக்கும் தெரியாதுள்ளதாகவும் அவர் விபரித்துள்ளார்.
இதேவேளை கனடா தனது நுளைவாயில்களில் துப்பாக்கிகளை எடுத்துவருவது தடை செய்யப்பட்டுள்ளது என்பதனை தெளிவாக காட்சிப் படுத்தியுள்ளதுடன், கனேடிய அரசாங்கம் இது குறித்த பயண எச்சரிக்கைகளைப் பிறப்பித்துள்ள போதிலும், தொடர்ந்து துப்பர்க்கிகளை எடுத்துவரும் அமெரிக்கர்கள் பொய்யுரைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.