வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தமது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
நாட்டின் நலன் கருதி தாம் இந்த தீர்மானத்தை எடுத்ததாகவும், அதனை நினைத்து பெருமை அடைவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் 1.30இற்கு கூடிய நாடாளுமன்ற அமர்வில், தம் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் வகையில் விசேட உரையொன்றை நிகழ்த்திய பின்னர், தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
எனினும், நாடாளுமன்ற உறுப்பினராக நாட்டு மக்களுக்கு தமது சேவை தொடருமென ரவி கருணாநாயக்க தமது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய வங்கியின் பிணை முறி விநியோகத்தில் பாரிய ஊழல் மோசடி இடம்பெற்றுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிலையில், ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழு அது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.
குறிப்பாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரனின் மருமகனான அர்ஜூன் அலோசியஸிற்கு சொந்தமான பர்பச்சுவல் ட்ரஸரீஸ் நிறுவனத்திற்கு லாபத்தை பெற்றுக்கொடுக்கும் வகையில், மத்திய வங்கியின் முறிகள் விநியோகிக்கப்பட்டதாகவும், அதனால் அரசாங்கத்திற்கு பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், ரவி கருணாநாயக்க நிதியமைச்சராக கடமையாற்றிய காலத்தில் அர்ஜூன் அலோசியஸூடன் வர்த்தக ரீதியிலான தொடர்புகளை பேணியதோடு, சில வரப்பிரசாதங்களையும் பெற்றுக்கொண்டதாக ஜனாதிபதி ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து ரவியிடம் ஜனாதிபதி ஆணைக்குழு தீவிர விசாரணை நடத்தியதோடு, மஹிந்த ஆதரவு ஒன்றிணைந்த எதிரணியால் நாடாளுமன்றில் நம்பிக்கையில்லா பிரேரணையொன்றும் சமர்ப்பிக்கப்பட்டது.
ரவி மீதான குற்றச்சாட்டுக்களை தொடர்ந்து, மஹிந்த அணி மாத்திரமன்றி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ரவியை பதவி விலகுமாறு அழுத்தம் கொடுத்து வந்தனர். இந்நிலையிலேயே ரவி கருணாநாயக்க தமது அமைச்சுப் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
நல்லாட்சி அரசாங்கம் ஆட்சி பீடமேறியதன் பின்னர், நிதியமைச்சராக பதவியேற்ற ரவி கருணாநாயக்க, கடந்த மே மாதம் வரை சுமார் இரண்டு வருட காலமாக நிதியமைச்சராக பதவி வகித்திருந்தார். நாட்டின் பொருளாதார நெருக்கடி தொடர்பில் இக்காலப்பகுதியில் நிதியமைச்சின் மீது பாரிய குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த மே மாதம் இடம்பெற்ற அமைச்சரவை மாற்றத்தின் போது, மங்கள சமரவீரவிற்கு நிதியமைச்சு கைமாறியதோடு, வெளிவிவகார அமைச்சராக ரவி கருணாநாயக்க நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.