பீரங்கிகளையும் செல்களையும் தோளில் சுமந்து சென்று தாக்குதல் நடத்தி ஜனநாயக பாதைக்கு வந்துள்ள முன்னாள் போராளிகளுக்கு, கத்திகளுடன் அலைய வேண்டிய தேவையில்லையென ஜனநாயக போராளிகள் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு லயன்ஸ் கிளப் மண்டபத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடகச் செயலாளர் எஸ்.துளசி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஆவா குழு என்ற பெயரில் முன்னாள் போராளிகளே செயற்படுகின்றனர் என பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், ஆவா குழு என்று ஒரு மாயை உருவாக்கப்பட்டுள்ளது எனவும், இதன் பின்னணி வெளிப்படுத்தப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
குறிப்பாக, ஆயுதக் கப்பல்களையும் சட்டவிரோத கப்பல்களையும் பிடித்த அரசாங்கத்திற்கு, குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை கைது செய்வதில் எவ்வித சிரமமும் இருக்காதென சுட்டிக்காட்டிய துளசி, இக் குற்றச்செயல்களில் ஈடுபடும் உண்மையான குற்றவாளிகளை கண்டறிவது அவசியமென வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, கிழக்கு மாகாண சபை தேர்தலில் சகல கட்சிகளும் இணைந்து போட்டியிடுவது அவசியம் என்றும் ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடகச் செயலாளர் துளசி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.