அமெரிக்காவின் குவாம் பகுதியை நோக்கி ஏவுகணைகளைப் பாய்ச்சக் கொண்டிருந்த திட்டத்தில் இருந்து வடகொரியா பின்வாங்கியதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்னைப் பாராட்டியுள்ளார்.
தென்கொரியாவுக்கு அதரவாக அமெரிக்கா இருந்து வருவதால் அமெரிக்காவை மிரட்டும் வகையில் ஏவுகணை சோதனை மற்றும் அணுகுண்டு சோதனை போன்றவற்றை வடகொரியா தொடர்ந்து நடத்தி வருகின்றது.
இதனால் வடகொரியா மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா கொண்டு வந்துள்ளதை அடுத்து, அமெரிக்கா மீதான வடகொரியாவின் ஆத்திரம் அதிகரித்துள்ளது.
அதன் வெளிப்பாடாக வட கொரியாவுக்கு அருகே யப்பானையொட்டி அமைந்துள்ள அமெரிக்காவுக்கு சொந்தமான குவாம் தீவை தாக்குவதற்கு 4 ஏவுகணைகளை தயாராக நிறுத்தி வைத்துள்ளதாக வட கொரியா அண்மையில் அறிவித்ததைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் பதற்றமான நிலைமை ஏற்பட்டது.
எனினும் தற்போது குவாம் தீவை தாக்குவதற்கு தயாராக நிறுத்தப்பட்டிருந்த 4 ஏவுகணைகளையும் திருப்பிப் பெறும்படி வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளதுடன், இந்த தாக்குதலை தள்ளி வைத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
இதனை அடுத்து வடகொரிய அதிபரின் இந்த முடிவை பாராட்டி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தமது டுவிட்டர் பக்கத்தில் கருத்துப் பதிவு செய்துள்ளார்.
அதில் வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் மிகவும் மதிநுட்பமாக, தெளிவாக முடிவெடுத்திருப்பதாக குறிப்பிட்டுள்ள அமெரிக்க அதிபர், அந்த ஏவுகணை திட்டம் செயல்படுத்தப்பட்டிருந்தால், அது மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தியிருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
வட கொரிய அதிபரின் இந்த முடிவின் மூலம் பேரழிவும், ஏற்று கொள்ள முடியாத செயலும் நிறுத்தப்பட்டு இருப்பதாக தாம் கருதுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.