வடகொரியாவின் மிரட்டலைத் தொடர்ந்து அமெரிக்கா மற்றும் தென் கொரியா ராணுவ பயிற்சியை தொடங்கியுள்ளனர்.
அமெரிக்கா, தென் கொரியாவின் இந்த கூட்டு ராணுவப் பயிற்சி ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
10,000க்கும் அதிகமான தென்கொரிய ராணுவ வீரர்கள் அமெரிக்க படையினருடன் ராணுவ பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் வீரர்களின் எண்ணிக்கை குறித்து தென்கொரிய அரசு சார்பில் எந்த அதிகாரபூர்வ தகவலும் வெளியிடப்படவில்லை.
ராணுவ பயிற்சியில் ஈடுபடும் அமெரிக்க வீரர்களின் எண்ணிக்கை 25,000த்திலிருந்து 17,500 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா ராணுவம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா, தென் கொரியா ஆகிய நாடுகளுடன் ஆஸ்திரியா, கனடா, நியூசிலாந்து, நெதர்லாந்து, பிரிட்டன் ஆகிய நாடுகள் பங்கெடுக்கலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
முன்னதாக உலக நாடுகள் பலவற்றின் எச்சரிக்கையும் மீறி வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வந்தது.
இதனைத் தொடர்ந்து அமெரிக்க ஐ. நா உதவியுடன் வடகொரியா மீது புதிய பொருளாதார தடையை விதித்தது. சீனாவும் வடகொரியாவுடனான இறக்குமதியை செம்படம்பர் 5-ம் தேதியுடன் நிறுத்தி கொள்ள போவதாக அறிவித்தது.
இதனால் கோபமடைந்த வடகொரியா, அமெரிக்காவின் ராணுவ தளவாடப் பகுதியான குவாம் தீவை தாக்கப் போவதாக அறிவித்தது.
அமெரிக்காவின் குவாம் தீவை தாக்க வடகொரியா திட்டமிட்டுள்ளதைத் தொடர்ந்து அந்நாட்டுக்கு எதிராக போர் தொடுக்க அமெரிக்காவும், தென்கொரியாவும் ராணுவ பயிற்சியில் ஈடுபட இருப்பதாக இரு நாடுகளும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.