இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள பேரறிவாளனை பரோலில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பேரறிவாளனை பரோலில் செல்ல அனுமதிப்பதற்கு தமிழக அரசு சம்மதம் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி பேரறிவாளனின் தாயாரின் கோரிக்கையை ஏற்று இவரை ஒரு மாதம் பரோலில் செல்ல தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
இதற்கான அரசாணை தற்போது வேலூர் சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தனது மகனுக்கு பரோல் கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பேரறிவாளனின் தாயார் தொடர்ந்து பல போராட்டங்களை முன்னெடுத்து வந்தார். இதற்கு பல தரப்பிலிருந்தும் ஆதரவு கிடைத்தன.
அந்த வகையில் தற்போது பேரறிவாளனுக்கு 26 வருடங்களுக்குப் பிறகு ஒருமாத காலம் பரோல் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த ஒரு மாதகாலம் அவர் பொலிஸ் பாதுகாப்பில் இருப்பார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 1991ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயகுமார், ரவிசந்திரன் ஆகிய 7 பேருக்கும் முதலில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.