அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தை தாக்கிய ஹார்வே புயல் காரணமாக, அடுத்த வார ஆரம்பத்தில் கனடாவில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறித்த அந்த புயல் கடந்து சென்ற பாதையிலேயே அமெரிக்காவின் 30 சதவீதமான எரிபொருள் வினியோக மற்றும் சுத்திகரிப்பு மையங்கள் உள்ள நிலையில், இந்த விலை அதிகரிப்பு தொடர்பிலான எதிர்வுகூறலை முதன்மை பெற்றோலிய ஆய்வாளர்கள் முன்வைத்துள்ளனர்.
இவ்வாறான புயல் காற்றுகளை தாங்கும் வல்லமை பல்வேறு சுத்திகரிப்பு நிலையங்களுக்கு உள்ள போதிலும், வெள்ளப் பெருக்கினை அவற்றால் சமாளிக்க முடியாது எனவும், வெள்ளப் பெருக்கு இவ்வாறான சுத்திகரிப்பு நிலையங்களை ஒரு வாரம் வரையில் முடி வைத்துவிடும் எனவும், பெற்றோலிய விவகாரங்கள் குறித்த நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
டெக்சாஸ் சுத்திகரிப்பு நிலையமே நியூயோர்க், போஸ்டன் ஆகிய நகரங்களுக்கான வினியோகத்தினை வழங்கிவரும் நிலையில், டெக்சாஸ் சுத்திரிப்பு நிலையம் மூடப்படுகின்றமை, அமெரிக்காவுக்கும் வினியோகங்களை மேற்கொள்ளும் அட்லான்டிக் கனடா மற்றும் ஒன்ராறியோவில் உள்ள சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அழுத்தங்களை ஏற்படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கனடாவின் இந்த சுத்திகரிப்பு நிலையங்கள் மேலதிக வினியோகங்களை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் பட்சத்தில், கனேடியர்கள் எரிபொருள் விலை அதிகரிப்பினை எதிர்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் தவிர்க்கமுடியாததாக இருக்கும் எனவும் அவர் முன்னுரைத்துள்ளார்.
அந்த வகையில், 2008ஆம் ஆண்டிலும் ஏற்பட்ட இதேபோன்ற நிலைமையுடன் ஒப்புநோக்குகையில், கனேடியர்கள் லீட்டருக்கு சுமார் 12 சதம் விலை அதிகரிப்பினை எதிர்நோக்க வேண்டியிருக்கும் எனவும் அவர் எதிர்வுகூறியுள்ளார்.
எனினும் இதனை உறுதியாக கூறமுடியாது எனவும், எதிர்வரும் புதன்கிழமை அளவிலேயே, புயலின் சேதாரங்கள் மதிப்பிடப்பட்ட பின்னரே, இந்த விலை அதிகரிப்பினை உறுதிப்படுத்தக் கூடியதாக இருக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.