அமெரிக்காவில் சிறுவயதில் சட்டவிரோதமாக குடியேறிவர்களுக்கான பொது மன்னிப்பு மற்றும் வேலைவாய்ப்பு சலுகைகளை ரத்து செய்வதற்கு டிரம்ப் எடுத்துள்ள முடிவுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் தற்போதைய ட்ரம்ப் அரசு, ஒபாமா அரசின் பல்வேறு ஆக்கப்பூர்வமான திட்டங்களை ரத்து செய்து வருகிறது. அந்த வகையில், தற்போது சிறுவயதில் உரிய ஆவணங்களின்றி அமெரிக்காவில் குடியேறிய 8 லட்சம் பேருக்கு ‘டி.ஏ.சி.ஏ.’ என்று அழைக்கப்படுகிற பொது மன்னிப்பை முந்தைய ஒபாமா அரசு வழங்கியதை ரத்து செய்திருக்கிறது.
இது தொடர்பாக கடந்த 5 ஆம் திகதி அறிவிப்பு வெளியிட்ட அமெரிக்க அட்டார்னி ஜெனரல் ஜெப் செசன்ஸ், 6 மாதங்களில் இது முடிவுக்கு வரும் என தெரிவித்துள்ளார். அதற்குள் இந்த திட்டத்தின்கீழ் அமெரிக்காவில் வசிப்பவர்களுக்கு நாடாளுமன்றம் சட்டப்பூர்வ தீர்வு காண வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
ட்ரம்ப் நிர்வாகத்தின் முடிவுக்கு எதிராக நியூயார்க், மசாசூசெட்ஸ், வாஷிங்டன், கனெக்டிகட், டெலாவரே, ஹவாய், இல்லினாய்ஸ், இயோவா, நியூ மெக்சிகோ, வடக்கு கரோலினா, ஒரேகான், பென்சில்வேனியா, ரோட் தீவு, வெர்மாண்ட், வெர்ஜீனியா ஆகிய 15 மாகாணங்களும், கொலம்பியா மாவட்டமும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளன.
புரூக்ளின் பெடரல் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கில், “சிறுவயதில் அமெரிக்கா வந்து தங்கியுள்ளவர்களுக்கு ‘டி.ஏ.சி.ஏ.’ திட்டத்தின்படி வழங்கப்பட்ட பொதுமன்னிப்பை ரத்து செய்தது, அரசியல் சட்டத்துக்கு எதிரானது. இதை ரத்து செய்ய வேண்டும்” என்று கோரப்பட்டுள்ளது.
இது குறித்து நியூயார்க் அட்டார்னி ஜெனரல் எரிக் ஸ்சனிடெர்மன் கருத்து தெரிவிக்கையில், “ட்ரம்ப் திட்டம் கொடூரமானது, குறுகிய நோக்கம் கொண்டது, மனித நேயமற்றது” என்று கூறினார். இதேபோன்று பல்வேறு மாகாண அட்டார்னி ஜெனரல்களும், ட்ரம்ப் அரசின் முடிவை சாடி உள்ளனர்.