சிறிலங்காவில் இடம்பெற்ற பல்வேறு யுத்த மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சிறிலங்கா இராணுவத்திற்கு எதிராக தற்போது மீண்டும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக தென் அமெரிக்காவைத் தளமாகக் கொண்டியங்கும் அனைத்துலக உண்மை மற்றும் நீதி நிகழ்ச்சித் திட்டத்தால் ஜெனரல் ஜெகத் ஜயசூரியவிற்கு எதிராக – இவர் தூதுவராகக் கடமையாற்றிய பிரேசில் மற்றும் கொலம்பியாவிலும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 29 அன்று ஜயசூரியாவிற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு மறுநாள் இவர் தனது நாட்டிற்குத் திரும்பினார். எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் முடிவடைந்த சிறிலங்காவின் உள்நாட்டுப் போரில் ஜயசூரிய கட்டளை நிலை இராணுவத் தளபதியாகக் கடமையாற்றியிருந்தார். இவர் யுத்தம் இறுதிக்கட்டத்தை அடைந்த போது இராணுவத் தளபதியாகக் கடமையாற்றிய- தற்போது பிராந்திய அபிவிருத்தி அமைச்சராக பணியாற்றும் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவின் நேரடிக் கட்டளையின் செயற்பட்டிருந்தார். ஆனால் தற்போது சரத் பொன்சேகா, ஜயசூரியவிற்கு எதிராக சாட்சியம் வழங்குமளவிற்கு நிலைமை தலைகீழாக மாறியுள்ளது.
சிறிலங்கா இராணுவத்தினருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணை செய்யப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும் என 2009 தொடக்கம் அனைத்துலக சமூகத்தால் அரசியல் ரீதியாகவும் இராஜதந்திர ரீதியாகவும் அழுத்தங்கள் இடப்படுகின்றன. 1949 ஜெனீவா சாசனம் மற்றும் ஹேக் சாசனங்களை மீறியதாக, சிறிலங்காவிற்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.
இந்நிலையில் ஐ.நா மனித உரிமைகளுக்கான ஆணையகத்தால் சிறிலங்கா மீது 11/1 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாகப் பொறுப்புக் கூறுவதற்கான பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சிறிலங்கா மீது விசாரணை செய்வதற்காக 19/2, 22/1, 25/1 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இவை மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தால் புறக்கணிக்கப்பட்டன.
சிறிலங்காவில் புதிய ஆட்சி ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஐ.நா மனித உரிமைகளுக்கான ஆணையகத்தில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்திற்கு சிறிலங்கா அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியிருந்தது. இத்தீர்மானமானது போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான நம்பகமான விசாரணையை வலியுறுத்துகிறது. சிறிலங்காவின் ஆட்சியைப் பொறுப்பேற்ற புதிய அரசாங்கமானது ஐ.நா மனித உரிமைகளுக்கான ஆணையகத்தால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நிறைவேற்றுவதற்குப் பதிலாக இது தொடர்பில் இராஜதந்திர நகர்வை மேற்கொண்டது. குறிப்பாக கலப்பு நீதிப் பொறிமுறை ஒன்றை உருவாக்குவதில் சிறிலங்கா அரசாங்கம் தோல்வியுற்றது. Mangala-unhrc (2)
எட்டு மாதங்களின் பின்னர் ஐ.நா மனித உரிமைகளுக்கான ஆணையாகத்தால் சிறிலங்கா தொடர்பில் 34/1 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதாவது சிறிலங்காவானது நீதி நடவடிக்கைளை முன்னெடுப்பதில் தாமதத்தைக் கொண்டிருந்தாலும் கூட உறுதியான நகர்வுகளை முன்னெடுப்பதாகச் சுட்டிக்காட்டி 30/1தீர்மானத்தில் கூறப்பட்ட விடயங்களை அமுல்படுத்துவதற்காக சிறிலங்காவிற்கு மேலும் இரண்டு ஆண்டுகால அவகாசத்தை வழங்கியது.
எனினும், 30/1 மற்றும் 34/1 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட காலப்பகுதியில் சிறிலங்கா அரசாங்கமானது பல்வேறு முரண்பட்ட அறிவித்தல்களை விடுத்தது. கலப்பு நீதிமன்றம் தொடர்பாகவும் போர்க் கதாநாயகர்களை நீதியின் முன் நிறுத்துவது தொடர்பாகவும் பல்வேறு வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளன.
இதில் பெரும்பாலான கருத்துக்களை சிறிலங்காவின் தற்போதைய அதிபர் மைத்திரிபால சிறிசேனவே முன்வைத்துள்ளார். குறிப்பாக சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த எந்தவொரு வீரரும் அனைத்துலக சமூகத்தால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் தண்டனைக்கு உட்படுத்தமாட்டார்கள் என அதிபர் அறிவித்திருந்தார்.
அனைத்துலக சமூகத்தின் கோரிக்கைகளை சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கமும் எதிர்க்கத் தொடங்கியுள்ளது. இதுவே சிறிலங்கா அரசாங்கத்தின் போலியான அணுகுமுறைக்கான சாட்சியமாக உள்ளது. சிறிலங்கா அரசாங்கம் தனக்கான கால அவகாசத்தை மேலும் மேலும் அதிகமாகப் பெற்றுக்கொண்டாலும் கூட இது ஒருபோதும் ஐ.நா தீர்மானத்தை நிறைவேற்றப் போவதில்லை என்பது தெளிவாகின்றது.
இவ்வாறானதொரு பின்னணியில், சிறிலங்காவானது தனது எந்தவொரு போர்க் கதாநாயகர்களையும் தண்டிக்கப்போவதில்லை என்பதை அனைத்துலக உண்மை மற்றும் நீதிக்கான நிகழ்ச்சித் திட்டம் கண்டறிந்ததுடன் அனைத்துலக சமூகத்தின் கோரிக்கைகளை முன்வைப்பதற்கான மாற்றுப் பாதை ஒன்றையும் கண்டறிந்துள்ளது.
முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச மற்றும் அவரின் கீழ் பணியாற்றியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, வன்னியில் இடம்பெற்ற யுத்த நடவடிக்கையில் சிறிலங்கா இராணுவத்திற்கு கட்டளை நிலைத் தளபதியாகச் செயற்பட்ட ஜெனரல் ஜெகத் ஜயசூரியாவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதென அனைத்துலக உண்மை மற்றும் நீதிக்கான நிகழ்ச்சித் திட்டம் தீர்மானித்தது.
சிறிலங்காவின் தூதுவராக ஜயசூரிய கடமையாற்றிய நாடுகளில் அவருக்கு எதிராக அனைத்துலக உண்மை மற்றும் நீதிக்கான நிகழ்ச்சித் திட்டத்தால் திட்டமிட்ட வகையில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவசர அவசரமாக ஜயசூரிய நாடு திரும்பினார்.
பிரேசில் மற்றும் கொலம்பியாவில் இவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் இவர் தூதுவராகக் கடமையாற்றிய ஆர்ஜென்ரீனா, சிலி மற்றும் பெருவில் இன்னமும் ஜயசூரியவிற்கு எதிராக இன்னமும் வழக்குத் தாக்கல் செய்யப்படவில்லை. சூரினாம் மட்டுமே ஜயசூரியாவிற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்கு மறுத்துள்ளது.
Yasmin Sookaதன் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு விடுமோ என்கின்ற அச்சத்தின் காரணமாக உடனடியாக நாடு திரும்பிய ஜயசூரிய, தன் மீதான யுத்தக் குற்றச்சாட்டுக்கள் நியாயமற்றவை எனவும் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெயர்ந்த மக்கள் மற்றும் சரணடைந்த புலி உறுப்பினர்களுக்கான புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்றச் செயற்பாடுகளிலேயே ஈடுபட்டதாகவும் தெரிவித்தார்.
அத்துடன் தான் வன்னியில் இடம்பெற்ற யுத்தத்தின் போது யுத்தகளத்திற்கு அருகில் கூட நிற்கவில்லை எனவும் தெரிவித்தார். எனினும், ஜயசூரியவிற்கு எதிராக தன்னிடம் சில சாட்சியங்கள் உள்ளதாகவும் இதனை ஊடகங்களுக்குத் தெரிவிப்பதில் தான் கவலைப்படவில்லை எனவும் சரத் பொன்சேகா அறிவித்திருந்தார். வன்னியில் கட்டளைத் தளபதியாகச் செயற்பட்ட காலப்பகுதியிலும் அதற்குப் பின்னரும் கூட பல்வேறு குற்றங்களில் ஜயசூரிய ஈடுபட்டார் என சரத் பொன்சேகா சுட்டிக்காட்டியுள்ளார்.
எது எவ்வாறிருப்பினும், செப்ரெம்பர் 03 அன்று இடம்பெற்ற சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மாநாட்டின் போது, தான் நாட்டின் போர்க் கதாநாயகர்களைப் பாதுகாப்பேன் என அதிபர் சிறிசேன வாக்குறுதி அளித்துள்ளார். ஜெனீவாவில் தனது அரசாங்கத்தால் இணை அனுசரணை வழங்கப்பட்ட தீர்மானத்தில் குறிப்பிட்டவாறு போர்க் கதாநாயகர்களுக்கு தண்டனை வழங்கும் விடயத்தை தான் கடைப்பிடிக்கப் போவதில்லை என அதிபர் சிறிசேன மீண்டும் மக்கள் மத்தியில் வலியுறுத்தியிருந்தார்.
ஜெகத் ஜயசூரிய பல்வேறு மீறல்களில் ஈடுபட்டிருந்தார் எனவும் இவருக்கு எதிராக எந்தவொரு நீதிமன்றிலும் சாட்சியமளிப்பதற்கு தான் தயாராக உள்ளதாகவும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். ஜயசூரியவிற்கு எதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் தனிப்பட்டது எனவும் இது முழு இராணுவத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை எனவும் பொன்சேகா தெரிவித்தார்.
ஜயசூரியவிற்கு எதிராக அவர் நேரடியாக மீறல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்படவில்லை என்பதையும் இவர் கட்டளைப் பொறுப்பை மேற்கொண்டமையே இவருக்கு எதிரான குற்றச்சாட்டாக உள்ளதையும் பொன்சேகா மறந்திருக்கலாம்.
போர் இறுதிக்கட்டத்தை அடைந்த போது குறித்த குற்றச்சாட்டுக்கள் இடம்பெற்றதாகக் கூறப்படும் காலப்பகுதியில் சிறிலங்கா இராணுவத்தின் முதல்நிலைக் கட்டளைத் தளபதியாக தானே செயற்பட்டிருந்தேன் என்பதை சரத் பொன்சேகா மறந்துவிட்டார்.
கட்டளைப் பொறுப்புத் தொடர்பாக ஜெனிவா சாசனங்களின் ஊடாக வலியுறுத்தப்படுகிறது. குறிப்பாக போர்க் கைதிகளை நடத்தும் முறைமை தொடர்பாக 1929 ஜெனிவா சாசனம் வலியுறுத்துகிறது. கட்டளைப் பொறுப்பு என்பது குறித்த குற்றச்சாட்டு இடம்பெறுவதற்கு கட்டளை வழங்கும் தளபதியே இதற்குப் பொறுப்பாவார் எனவும் அதனை மேற்கொள்ளும் வீரர் பொறுப்பல்ல என்பதையும் இந்தச் சட்டம் வலியுறுத்துகிறது.
இதனையே ரோம் சாசனமும் வலியுறுத்துகிறது. சிறிலங்கா கைச்சாத்திட்டுள்ள ஹேக் சாசனங்களிலும் கட்டளைப் பொறுப்புத் தொடர்பாக விதந்துரைக்கப்பட்டுள்ளது. ஜெனிவா சாசனங்கள் மற்றும் ஹேக் சாசனங்கள் போன்றன வழக்கத்திலுள்ள அனைத்துலக மனிதாபிமானச் சட்டமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. general jegath-jeyasoorya
‘கட்டளைத் தளபதிகள் மற்றும் ஏனைய கட்டளை நிலை அதிகாரிகள் தம் கீழ் செயற்படும் படைவீரர்களால் மேற்கொள்ளப்படும் போர்க் குற்றங்களுக்குப் பொறுப்பாளிகளாவர். அதாவது தமக்குக் கீழுள்ள வீரர்கள் குற்றங்களை இழைக்கும் போது அவற்றைத் தடுப்பதற்கு கட்டளைத் தளபதிகள் நடவடிக்கை எடுக்காது விடும்போதும், இவ்வாறான குற்றங்களில் ஈடுபடும் வீரர்களுக்கு தண்டனை வழங்காத போதும் கட்டளைத் தளபதிகளே இதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும்’ என வழக்கத்திலுள்ள அனைத்துலக மனிதாபிமானச் சட்டத்தின் 153வது விதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விதிக்கேற்ப, ஜயசூரியவிற்கு எதிராக சரத் பொன்சேகா சாட்சியங்களை முன்வைக்கும் போது அக்குற்றச்சாட்டுக்கள் இடம்பெற்ற போது இராணுவத்தின் கட்டளைத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகா தன்கீழ் பணியாற்றிய ஜயசூரிய இவ்வாறு குற்றமிழைப்பதற்குக் காரணமாக இருந்தார் என்பதைச் சுட்டிக்காட்டி சரத் பொன்சேகாவிற்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம்.
கட்டளைப் பொறுப்பின் விளைவாக, ஜயசூரியாவிற்கு எதிராக போதியளவு சாட்சியங்கள் சட்ட நீதிமன்றில் முன்வைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட முடியும். எதுஎவ்வாறிருப்பினும், சிறிலங்காவின் இறையாண்மை என்பது எப்போதும் அங்கீகரிக்கப்பட வேண்டும். அத்துடன் சிறிலங்காவின் இராஜதந்திரிகள் சுயநலன்களுக்கு எதிராகப் பாதுகாக்கப்படும் உரிமையையும் சிறிலங்கா கொண்டுள்ளது. இராஜதந்திர உறவுகள் தொடர்பான வியன்னாப் பிரகடனத்தின் கீழ் இராஜதந்திரிகள் பாதுகாக்கப்படுகின்றனர். ஆகவே இந்த வகையில் ஜயசூரியவும் இராஜதந்திரப் பாதுகாப்பைக் கொண்டிருந்தார்.
போர்க் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட சிலியின் முன்னாள் அதிபரும் சிலி இராணுவத்தின் கட்டளைத் தளபதியாகவும் செயற்பட்ட ஒகஸ்ரோ பினோசே கைது செய்யப்பட்ட சம்பவம் இங்கு விபரிக்கப்படுகிறது. இவர் 1998 மார்ச் 10 அன்று வயது முதிர்ந்த நிலையில் மருத்துவத்திற்காக இங்கிலாந்தின் லண்டனைச் சென்றடைந்தார். இவர் இங்கிலாந்திற்குச் சென்ற காலப்பகுதியில் வாழ்நாள் செனற்றர் என்ற பதவியைத் தவிர தனது அனைத்துப் பதவிகளிலிருந்தும் விலகியிருந்தார்.
ஒகஸ்ரோ பினோசே சிலியின் அதிபராகப் பதவி வகித்த போது இவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இவர் கைது செய்யப்பட வேண்டும் என ஸ்பானிய நீதிபதி ஒருவர் வழக்குத் தாக்கல் செய்திருந்ததுடன் சித்திரவதைகள் சாசனத்தின் பிரகாரம் பினோசே பல்வேறு சித்திரவதைகளில் ஈடுபட்டிருந்தார் என்பதைக் காரணங்காட்டி இவருக்கு எதிராக இன்ரபோலின் சிறைப்படுத்துப் பற்றாணை வழங்கப்பட்டது.
இதற்கமைவாக பினோசே பிரித்தானிய அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டார். இவர் ஸ்பானியவிடம் ஒப்படைக்கப்பட வேண்டுமா என விவாதிக்கப்பட்டது. பினோசே இராஜதந்திரப் பாதுகாப்பைக் கொண்டுள்ளதாகவும் பிரித்தானிய நீதிமன்றங்களின் சட்டத்திலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் எனவும் சட்டவாளர்கள் வாதிட்டனர். ஆனால் பினோசேக்கு எந்தவொரு இராஜதந்திரப் பாதுகாப்பும் இல்லை என பிரபுக்கள் சபை தீர்மானித்தது. இதன் மூலம் பினோசேக்கு எதிராக 300 குற்றங்கள் பதிவுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது மரணமடைந்தார்.
sarath-fonsekaநிபந்தனையற்ற விதிமுறைகளின் கீழ் அதாவது போர்க் குற்றங்கள், இனப்படுகொலைகள், மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள் போன்ற குற்றங்களின் அடிப்படையில் குற்றம் சுமத்தப்படும் ஒருவரை எந்த நாட்டின் நீதிமன்றமும் கைது செய்வதற்கான உரிமையைக் கொண்டுள்ளது என சட்டம் கூறுகிறது.
இந்த அடிப்படையில் நோக்கில், போர்க் குற்றச்சாட்டுக்களுக்காக ஜெகத் ஜயசூரிய கைது செய்யப்பட வேண்டும் என பிரேசில் மற்றும் கொலம்பிய நீதிமன்றங்கள் தீர்மானித்திருந்தால் ஜயசூரியவை இவர்கள் கைது செய்திருக்க முடியும்.
ஜயசூரியவைக் கைது செய்வதற்கான உத்தரவாதத்தை அனைத்துலக உண்மை மற்றும் நீதிக்கான நிகழ்ச்சித் திட்டம் வழங்கியிருந்தால் அவர் கைது செய்யப்பட்டிருப்பார். குறிப்பாக இவருக்கு எதிரான அல்லது இவரது கட்டளையின் கீழான இராணுவ வீரர்கள் போர்க் குற்றங்களில் ஈடுபட்டனர் என்பதற்கான போதியளவு ஆதாரங்கள் கைவசம் இல்லாமையே ஜயசூரிய கைது செய்யப்படாமைக்கான காரணமாக இருக்கலாம்.
எனினும் பிரேசில் மற்றும் கொலம்பிய உள்நாட்டு நீதிமன்றங்கள் இவரைக் கைது செய்வதற்கான அவசியமான ஆணையைக் கொண்டிருக்காமலும் இருக்கலாம்.
ஆகவே ஜயசூரிய போன்ற போர்க் குற்றவாளிகள் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தப்பட்டே விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். ஏனெனில் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றமானது இனப்படுகொலை, மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் ஆக்கிரமிப்புக் குற்றங்களை விசாரணை செய்வதற்கான சட்ட உரிமையைக் கொண்டுள்ளது.
139 நாடுகள் றோம் சாசனத்தை ஏற்றுக்கொண்ட போதிலும் சிறிலங்கா இன்னமும் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திற்கான பிரச்சினையாகும். றோம் சாசனத்தில் சிறிலங்கா கைச்சாத்திட்டிருந்தால் மட்டுமே அனைத்துலக குற்றவியல் நீதிமன்றானது தன்னிச்சையாக சிறிலங்காவிற்கு எதிராக நீதி நடவடிக்கையை எடுக்க முடியும்.
சிறிலங்காவின் குடிமகன் ஒருவனை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் விசாரணை செய்வதற்கு றோம் சாசனத்தை சிறிலங்கா ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும். முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவிற்கு எதிராக குற்றவியல் விசாரணை மேற்கொள்ளும் அனைத்துலக சமூகத்தின் அழுத்தம் நிராகரிக்கப்பட்டமைக்கும் இதுவே காரணமாகும்.
முதலாவதாக, றோம் சாசனத்தின் 15வது பத்தியின் பிரகாரம் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றில் வழக்குத் தொடுப்பதற்கு மட்டுப்படுத்தப்பட்ட சட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும் இந்த சாசனத்தின் 87வது பத்தியின் பிரகாரம் இதில் கைச்சாத்திடாத நாடுகளும் குற்றம் சுமத்தப்பட்டவருக்கு எதிராக விசாரணை மேற்கொள்வதற்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும். ஆகவே சிறிலங்காவிற்கு எதிராக வழக்குத் தொடுப்பதாயின் இவ்வாறான நடைமுறைகள் கவனிக்கப்படுவதுடன், சிறிலங்கா கைச்சாத்திட்டுள்ள வியன்னா சாசனத்தின் நீதி வரையறுகளும் கவனத்திற் கொள்ளப்பட வேண்டும்.
sarath-jegathஇரண்டாவதாக, ஐ.நா சாசனத்தின் 7வது அத்தியாயத்தின் கீழ், போர்க் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டவர்களுக்கு எதிராக விசாரணை மேற்கொள்வதற்கு பாதுகாப்பு சபையின் அனுமதி கோரப்படுகிறது. பாதுகாப்பு சபையானது தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற வேண்டுமாயின், குறித்த நாடு இதற்கு அனுமதிக்க வேண்டும் அல்லது அண்மையில் ஈரான் மற்றும் வடகொரியாவில் இடம்பெற்றது போன்று கடுமையான பலவந்தத் தடைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியிருக்கும்.
இதற்கும் மேலாக, ஐ.நா சாசனத்தின் 94வது அத்தியாயத்தின் பிரகாரம், அனைத்துலக நீதிக்கான நீதிமன்றின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள உறுப்பு நாடுகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு எவ்வாறான வழிவகைகளைக் கையாள்வது என்பதை பாதுகாப்புச் சபை தீர்மானிக்க முடியும். இவ்வாறானதொரு சூழலில், குறித்த நாட்டிற்கு எதிராக வழக்கு விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பாதுகாப்புச் சபை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றிற்குப் பரிந்துரைப்பதற்கு அனுமதிக்கப்படுகிறது.
மூன்றாவதாக, றோம் சாசனத்தின் கீழ் கைச்சாத்திட்டுள்ள நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக போர்க் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படும் போது அவர் கைது செய்யப்படுவதற்கு அனுமதிக்கப்படுகிறது. இவ்வாறானதொரு சம்பவமே சிலியின் முன்னாள் அதிபர் பினோசே கைது செய்யப்படுவதற்கு காரணமாகும். ஏனெனில் சிலி, பிரித்தானியா மற்றும் ஸ்பெயின் ஆகியன றோம் சாசனத்தில் கைச்சாத்திட்டுள்ளன.
இதேபோன்று ஜயசூரியவின் விடயத்திலும், பிரேசில் மற்றும் கொலம்பியா ஆகியன றோம் சாசனத்தில் கைச்சாத்திட்டுள்ளதால் இவர் இவ்விரு நாடுகளில் ஏதேனுமொன்றில் கைது செய்யப்பட்டால் அவரைப் போர்க் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துவது சாத்தியமானதாகும்.
போர்க் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் ஜெகத் ஜயசூரியவைக் கைது செய்வதற்கான வழிகள் உள்ளன என்பதற்கான சாட்சியமாக இது காணப்படுகிறது. ஆனால் போர்க் குற்றங்களில் ஈடுபட்ட முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச, தற்போதைய அதிபர் மைத்திரிபால சிறிசேன, முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச போன்ற அனைவருக்கு எதிராகவும் போர்க் குற்ற வழக்குப் பதிவு செய்யப்படலாம்.
சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்ட போது இவருக்கு எதிராக மகிந்த ராஜபக்சவுடன் இணைந்து ஜயசூரியவும் செயற்பட்டிருந்தார் என்பதற்கு பழி தீர்ப்பதற்காகவே தற்போது ஜயசூரியவிற்கு எதிராக சரத் பொன்சேகா குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார். ஆகவே பொன்சேகா, ஜயசூரியவிற்கு எதிரான சாட்சியங்களை முன்வைக்கத் தயாராக உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஆனாலும் ஜயசூரியவிற்கு எதிராக சாட்சியங்களை முன்வைப்பதன் மூலம் தனது கட்டளைப் பொறுப்பை நிறைவேற்றவில்லை என்கின்ற குற்றச்சாட்டிற்கு ஆளாக நேரிடும் என்கின்ற ஆபத்தை சரத்பொன்சேகா உணரத் தவறியுள்ளார்.
சரத் பொன்சேகா முன்னைய ஆட்சியில் தனக்கு எதிராக நடந்து கொண்ட எதிரிகளைப் பழிக்குப் பழி தீர்க்க நினைக்கிறாரே தவிர அனைத்துலக உண்மை மற்றும் நீதிக்கான நிகழ்ச்சித் திட்டத்தின் உண்மையான நோக்கம் என்பதை உணரத் தவறிவிட்டாரா அல்லது தன்னுடன் பணிபுரிந்த சக இராணுவ வீரர்கள் மற்றும் தளபதிகளுக்கு இழிவை ஏற்படுத்துவதில் விருப்பம் கொண்டுள்ளாரா?
சிறிலங்கா மீது விசாரணையை மேற்கொள்வதற்கு அனைத்துலக உண்மை மற்றும் நீதிக்கான நிகழ்ச்சித் திட்டமானது ஜயசூரியவை அடமானம் வைப்பதையும் அதன் பின்னர் போரில் முக்கிய பங்காற்றிய சிறிலங்காவின் உயர் அதிகாரிகளுக்கு எதிராக விசாரணைகளை முன்னெடுப்பதையும் நோக்காகக் கொண்டுள்ளது என்பதை, இது தொடர்பில் சரத் பொன்சேகா மேலதிக நகர்வுகளை முன்னெடுக்க முன்பு உணர்ந்து கொள்ள வேண்டிய தேவையுள்ளது.