மகிந்த ராஜபக்ச மீண்டும் அதிகாரத்துக்கு வந்து விடுவார் என்ற அச்சத்தினால், தற்போதைய அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதைத் தவிர்த்து வருவதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
பிபிசி சிங்கள சேவைக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“தமிழ் மக்களுக்கு ஏதாவது நன்மை செய்து விட்டால், மகிந்த ராஜபக்ச மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றி விடுவார் என்று அரசாங்கம் இன்னமும் அஞ்சுகிறது. இதனால் தமிழ் மக்களின் பிரச்சினைகளை ஒருபோதும் தீர்க்க முடியாது.
அவர்கள் எம்முடன் பேசும் போது, நன்றாகவே பேசுகிறார்கள். எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்கிறார்கள். ஆமாம், ஆமாம் என்கிறார்கள்.
ஆனால், பின்னர் ஏன் நீங்கள் எதையும் செய்யவில்லை என்று கேட்டால், நாங்கள் மெதுவாகவே, நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கிறது, இல்லாவிட்டால் மகிந்த ராஜபக்ச அதிகாரத்துக்கு மீண்டும் வந்து விடுவார் என்கிறார்கள்.
நேற்று மல்வத்தை பீடத்தின் மகாநாயக்க தேரர் எந்த அரசியல் நோக்கமும் இல்லாமல், வடக்கு மக்களின் பிரச்சினைகள் பற்றி பேசினார்.
அவர் அரசியல் பேச விரும்பவில்லை. அவர் மனிதநேயத்துடன் அவர் பேசினார்.
எம்முடன் அவர் மிக நன்றாக உரையாடினார். அவரைப் போலவே எல்லா பௌத்த பிக்குகளும் இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.